இன்னைக்கு எங்க ஆபீசில் சாப்பிடும் நேரத்தில் பேசிகிட்டு இருந்தப்போ, இப்போ உள்ள குடும்பங்கள் எல்லாம் ரொம்ப பிரிஞ்சி கிடக்குது என்று பேச்சு எங்கெங்கோ ஆரம்பிச்சு எங்கெங்கோ போயி முடிஞ்சிது..
அவரவர் அவரவர் குடும்ப பழைய நினைவுகளை பேச...
என்னவோ திடீர்னு எனக்கு கொண்ணைக்காடு பெரியம்மா வீடு நினைவுக்கு வர அதை அவங்ககிட்ட சொன்னேன்...
(எனது மனதில் பட்டது இவை.. வேறுபட்ட கருத்துக்கள் கூட சிலருக்கு இருக்கலாம், ஆனால்.. பெரிதாக வித்யாசம் இருக்காது என்று எண்ணுகிறேன்.)
அதை இங்கே நான் பகிர்வது ஒரு மீள் நினைவலைகளாக இருக்கும் என்று எண்ணுகிறேன்..
கொண்ணைக்காடு, மாவடிக்கோட்டை.. அதிகம் நான் முழு ஆண்டு விடுமுறைக்கு போன பெரியம்மாக்கள் ஊர் இவைகள் தான்.
கொண்ணைக்காடு பெரியம்மா... அம்மாவுக்கு மூத்த அக்காள் என்பதால், எனது பல பெரியம்மாக்களும் அங்கு சேர்ந்து சென்று முழு ஆண்டு விடுமுறை காலத்தை கழிப்பது (கொண்டாடுவது என்பதே சரியாக இருக்கும்) உண்டு..
வயல், வரப்பு, கால்வாய், தரையில் படர்ந்து கிடைக்கும் மாமரங்கள், பச்சரிசி மாங்காய், தென்னை தோப்பு, குமட்டிக்காய், எள், நிலக்கடலை, தட்டப்பயிர் என பொன் விளையும் பூமியாக ஆத்துப்பாசனம் நிறைந்த ஊர்..
இன்னைக்கு ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்தாலே சமையல் செய்ய சங்கடப்படும் நிலையில்...
அன்னைக்கு எங்க கொண்ணைக்காடு பெரியம்மா வீட்டு அடுப்பு அதிகாலை முதல் இரவு வரை எரிந்துகொண்டே இருக்கும்...
ஒரு வேளைக்கு பதினைந்து முதல் இருபது இருபத்தைந்து ஆளுங்க நாங்க சாப்பிட்ட காலம் எல்லாம் நினைத்தால் மலைச்சு போக வேண்டி இருக்கு இன்னைக்கு உள்ள நிலவரத்தோட ஒப்பிட்டா..
யாரும் வீட்டுக்கு வந்தா ரெண்டாவது முறை இட்லி ஊத்தவே கஷ்டமா இருக்கும் காலம் அல்லவா இது.. பிரியாணி ஆர்டர் செஞ்சி கடமை முடிக்க எண்ணுகிறோம்.
ஆனால் கொண்ணைக்காடு பெரியம்மா, அவங்க பிள்ளைகளான எங்கள் அண்ணன்கள், அக்காக்கள், தங்கை எல்லாரும் எந்த சங்கடங்களுக்கு இடமில்லாமல்
மாதம் முழுதும் எல்லோருக்கும் சமைத்து போட்டதும், திருவிழாக்களுக்கு காசு கொடுத்து அனுப்பியதும், ஊருக்கு திரும்பும்போது கடலை, எள், மாங்காய், பயறு, தேங்காய் என்று தங்கைகளுக்கு தனித்தனியா துணிப்பையயில், அரிசி சாக்கில் மூட்டை கட்டி கொடுத்ததும் இன்று நினைக்கையில் மனசு லேசா கனத்திடும் போலிருக்கு.
அதிலும் எங்க அண்ணன்களின் சட்டை பேண்டுகள் தருவாங்க.. இன்னைக்கு எவ்வளவு காஸ்டலியான சட்டை போட நினைத்தாலும் கொண்ணைக்காடு நீலகண்டன் அண்ணனின் சட்டை மாதிரி வராது.. அப்பவே அண்ணன் அவ்வளவு நேர்த்தியாய் துணி எடுப்பார். இன்னைக்கும்
அண்ணன் ஹீரோ தானே. நீலகண்டன் அண்ணன் வெளிநாட்டுக்கு போயிட்டு வந்த பின் அவர் தந்த வாச் பல நாட்கள் கட்டி இருந்தேன்..
அதுக்கு முன்னர் வெளிநாடு என்றால் இளங்கோ மாமா போய் வந்தது...
அம்மாவுக்கு வரி வாரியாக ரோஸ், ஊதா, நிறத்தில் உள்ள சேலை, கதவு திறக்க கூடிய சின்ன கார்கள், பால் பாயிண்ட் பேனா (நான்கு பேனாக்களில் கிட்டத்தட்ட ஐந்து வருடம் ஆகிய பின்னரும் அதில் ஒன்றை வைத்திருந்தேன்)
கொண்ணைக்காடுக்கு வருவோம்,
எல்லாத்துக்கும் மேல எங்க பெரியப்பா.. கொஞ்சம் கடு கடுன்னு சுத்தி வந்தாலும் தனது மனைவி குடும்பம், அதுக்கு அவர் குடும்பத்துக்கு மூத்த மருமகன் என்ற நிலையில் சங்கடங்களிலன்றி எங்க பெரியம்மா கொடுப்பதை மகிழ்ச்சியாய் ஆதரித்ததை நினைத்தால்.... இன்னைக்கு எல்லாம் இப்படி ஒரு குடும்ப ஐக்கியம் எங்கேனும் இருக்கா என தேடிப்பார்க்க தோணுது.!
பெரியப்பாவுக்கு மதிய சாப்பாடு எடுத்துக்கிட்டு ரயில்வே லைனில் நடந்து செந்தட்டி செடியில் உரசி தடிப்புகளுடன் போய் வந்த காலங்கள் போயே போச்சு..!
மாவடிக்கோட்டை பெரியம்மா வீடு என்பது வேறு ரகம், நேற்று மிச்சம் இருக்கும் பழைய சோற்றில் பெரியம்மா தயிர் கடைந்து எடுத்த மோர் ஊற்றி முந்தாநாளு மண் சட்டியில் செஞ்சி இப்போ மீன் எது குழம்பு எது என தெரியாமல் போன மீன் குழம்பை தொட்டுக்கிட்டு சாப்பிட்ட ருசியை மறக்க முடியாது..
சோத்துல கல்லு கல்லா கிடக்கு என்று நான் சொன்னப்போ, இதை எப்புடி கல்லு வராம அரிச்சு சாப்பிடணும் என்று பெரியம்மா சொன்னதை இன்னைக்கும் மறக்க முடியாது.
அக்காக்கள் திருமணம், காதணி விழாக்கள், அண்ணன்கள் திருமணம், என வருடங்கள் திரும்ப வராது போன காலங்கள் அவை.
குளத்தில் தண்ணீர் தூக்கியது, தேத்தாங்கொட்டை போட்டு குடிச்ச தண்ணீர், ரகம் ரகமா பாம்புகள் அலையும் ஊர் என மாவடிக்கோட்டை - பூவலூர் கிராமம் தனி ரகம் . ஊரணி குளியல், தாமரை இலை, நொங்கு, பனம்பழம், சலசலக்கும் பனைமரம், ஆளே இல்லா பஸ்ஸ்டாப்பு, செருப்பை கழட்டி கையில் வச்சிக்கிட்டு கடக்கும் முனிக்கோயில், ஆங்காங்கே கவ்வ ரெடியாய் உள்ள நாய், என பயங்கரமான ஏரியா..
கொண்ணைக்காடு பச்சை பசேல் எனும் ஆத்துப்பாசனம் என்றால் மாவடிக்கோட்டை வானம் பாத்த களிமண் வறண்ட நிலம்.
திருவிழா என்றால் பாய் துப்பட்டி சகிதமா போயி படுத்து தூங்கிய நாட்கள் அவை..
காலையில் சிதறிய சிகரெட் அட்டைகளும் அதிதாய் கிடைக்கும் ஐம்பது பைசா ஒரு ரூபாய் நாணயங்களும் திருவிழா நாடகம் முடிந்த காலை மண்ணை சுரண்டிய அனுபவங்கள்..
வள்ளியும் முருகனும் கல்யாணம் பண்ணிக்குறத்துக்கு முன்னாடியே விடிஞ்சி வெயில் வந்த நாட்களும் உண்டு..!
எல்லாம் கொத்து கொத்தாய் வாழ்த்த காலம் போயி சின்ன சின்னதாய் சிதறிய காலம் ஒரே தலைமுறையில் ஆனது தான் நாகரீக வளர்ச்சி, இந்த கல்வி தந்த புரட்சி..! வேலைவாய்ப்பு, பணம் தேடி ஓடிய காலத்தின் நிதர்சன நிகழ்ச்சி..!
கல்லுரியில் படி.. வேலை தேடு.. நாய் மாதிரி கம்பெனி கம்பெனியாக அலைந்து கூலிக்கு போராடு.. இப்படி ஆனது என்னவோ எங்கள் சிலரின் சாபக்கேடு.!
கொண்ணைக்காடு பெரியம்மா வீட்டுல ஐந்து சகோதரிகளும் தங்கள் குடும்பமாய் சேர்ந்து இருந்த ஒரு சில நாட்கள் இனி வரவே வராது, அப்புறம் ஐந்து பேரும் சேர்ந்து இருக்க வாய்ப்பு இல்லாமலே போச்சு..
பெரியம்மாவுக்கு முடியாமல் போயி நான் ஆஸ்பத்திரியில் அவங்க கூட இருந்த காலம் எல்லாம் வருத்தமான காலங்கள்.. அவங்க எச்சில் துப்பிய, வாந்தி எடுத்த பேசினை நான் எடுத்து கழுவும் நேரத்தில் கூட அவனை எதுக்கு இத செய்ய விடுறீங்க என கோவமாய் கண்டித்து சொன்ன நினைவுகளோடு... இனிமேல் வாய்ப்பில்லை என்று மருத்துவர் சொன்ன பின்னர் வீட்டுக்கு வந்த நினைவுகள் வரை.. எல்லாமே சட்டுன்னு நடந்துட்டு..
பெரியம்மாவை வீட்டுக்கு கொண்டு வந்த நேரத்தில், பைகளை இறக்கி வைக்கும் அவசரத்தில் ஒரு பையை வேகமாக நான் வைத்துவிட, பைக்குள் இருந்த பிளாஸ்க் பீங்கான் உடைந்து விட்டது...
இப்படி உடைய கூடாதே, நல்லது இல்லையே என சிலர் அங்கு பேச ஆரம்பிக்க, அம்மா என்னை திட்ட துவங்கும் போது அந்த கடைசி தருணத்திலும் பெரியம்மா என்ன ஏதுன்னு விசாரிச்சி "அவனை திட்டாதீங்க, வேற பிளாஸ்க் வாங்கி கொடுத்துக்கலாம்" என்று மெல்லிய குரலில் சொன்னதை எப்படி மறக்க முடியும்.!
எங்க கொண்ணைக்காடு பெரியம்மா இப்போ இல்லை..
பெரியம்மாவுக்கு அப்புறம் கொண்ணைக்காடு போவது என்பதும் அரிதாக ஆனது ஏன் என தெரியலை.!
இப்போது எல்லாம் எல்லா ஊரும் மாறி விட்ட காலம் தானே.!!
போன் வந்து உறவுகளும் இணைப்புகள் இல்லா வயர்லெஸ் ஆனது.
அடுப்பூதும் பெண்கள், சமையலில் முடங்கிய பெண்கள் அது இதுன்னு சொல்லி எல்லோருக்கும் பவர் வேண்டும், கல்விதான் அந்த பவரை தரும் என்றெல்லாம் சொல்லிய பலருக்கு ஒரு பெண் தனது குடும்பத்தை கட்டமைத்து அதன் நல்லது கெட்டதுகளை மேலாண்மை செய்து தனது தங்கைகளுக்கு ஒரு தாய் போல இருந்து தனது ஒரு குரலுக்கு கட்டுப்படும் அளவுக்கு அதிகாரத்துடன் இருந்த எங்க கொண்ணைக்காடு பெரியம்மா மாதிரி இப்போ படித்து பட்டம் பெற்ற எத்தனை பேரு குடும்பத்தை சேர்த்து பிடித்து இருக்காங்கன்னு தெரியலை..
எங்க பெரியப்பா... அவர் இன்னும் எங்கள் கொன்னக்காட்டு நினைவுகளின் மிச்சமாய்..! நான் அதிகம் அவருடன் பேசியது இல்லை. சந்திப்புகளும் இப்போதெல்லாம் மிக குறைவாக..!
மரியாதைக்கு உரிய அந்த மனுசன் அவ்வப்போது கோபப்பட்டாலும், எங்க பெரியம்மா தனது மனதில் பட்டதை செய்ய தடை இட்டது இல்லை என்றே கருதுகிறேன்.
கொண்ணைக்காடு பெரியப்பாவுக்கு நன்றி சொல்ல தோணுச்சு..!
நன்றி பெரியப்பா..!!
வேலை நிமித்தம் சென்னைக்கு வந்தாலும் வீட்டுக்கு கூட ஒரு நாள், ரெண்டுநாள் லீவ் போட்டு போகும் நிலையில் ஆன பின்பு இனி இப்படி ஒரு கூட்டு சொந்தங்களை காண முடியுமா என்று தெரியலை.!
இங்க உருவாக்கிய வாட்சப் குரூப்பில் இருந்து கூட சிலர் வெளியே போயிட்டாங்க.. வாழ்க்கை குரூப்பில் எம்மாத்திரம்..?!
எங்க அலுவலக சாப்பாட்டு இடைவேளை இன்று பல வருடங்களுக்கு முன் எனது நினைவுகளை கொண்டு போய் விட்டது..!!
இங்க சொல்லணும் என்று தோனுச்சு..!! அதான் எண்ணங்களை எழுத்தாக சொல்லிட்டேன்.!!
கருத்துகள்
கருத்துரையிடுக