முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வறுமையின் நிறம் மஞ்சள்




அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்...

வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்.. 

மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்..

பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்  இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல.

கரையேறி கோவில் அருகே கடக்கையில்..

“அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்..

“மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்..

இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை.. 
மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியும் வயசுதான்.. அப்பாவுக்கும் வேலை போயி இரண்டு வருஷம் ஆகுது.. ஏதோ ஆண்டவன் புண்ணியத்துல குடும்பம் ஓடுது.

இதுல மூணு ரூவாவுக்கு பலூனா..? எண்ணம் தாறு மாறாய் அம்மாவுக்கு ஓடிற்று. சற்று அப்புறம் கடக்க முயன்றாள்.  அம்மாவின் இறுக்கம் அதிகமானதை உணர்ந்த பார்வதி நெளிந்து அழ ஆரம்பித்தால். அவளை அடக்குவது அம்மாவுக்கு எப்போதும் பெரும்பாடுதான்.

வேறு வழி இல்லை. வீடு போய்ச்சேர மூணு மைல் தூரம் இருக்கு. இவளை கண்டிப்பா இப்படியே ஒரு பர்லாங்குகூட தூக்கிக்கொண்டு போக இயலாது. துள்ளி அழுது உயிரை எடுப்பாள். ஒரு மஞ்சள் பலூன் வாங்கினாள்.

“ஊதி குடுத்துடுங்க.” என்றாள் அம்மா..

“பெரிய பலூன் தாயி.. வீட்டுல போயி ஊத்திக்குங்க. இப்போ ஊதுனா கொண்டுபோவது கஷ்டம்.” என்றார் பலூன்காரர். 

ஆமாம்.. அது சற்று பெரிய பலூன்தான். கிட்டத்தட்ட இரண்டு அடி விட்டம் இருக்கும். பார்வதி அதை அகல விழிகளுடன் கையில் வாங்கிக்கொண்டாள். 

பையனுக்கு இரண்டு ரூபாய்க்கு சீனிச்சேவு வாங்கினாள் அம்மா.

----

வீடு வந்தாயிற்று. பொழுது நன்கு விடிந்தாயிற்று. அம்மா தண்ணீர் பிடிக்க பக்கத்து தெரு பைப்புக்கு செல்ல குடம் எடுத்தாள்.

“அம்மா.. ஊதிக்குடும்மா..” என்றாள் பார்வதி. அண்ணன்கிட்ட ஊதிக்கடா செல்லம். அம்மா தண்ணீர் தூக்க போகணும்ல என்று குடத்துடன் நகர்ந்தாள். மாறன் சீனிச்சேவு பக்கம் திரும்பும் முன், “நீ, ஊதிக்குடு” என மாறனிடம் பலூனை நீட்டினாள்.

தம் கட்டி மாறன் ஊத துவங்கினான். மஞ்சள் பலூன் வளர வளர மஞ்சள் நிறத்தில் பார்வதியின் முகம் மலர்ந்தது. மாறனுக்கு அதின் முழு அளவும் தெரியும். பலூன்கடையில் ஊதி வைத்திருந்ததை கவனிக்கத்தவறவில்லை. எனவே அதின் பருமனை எட்டும் வகையில் ஊதினான்..

“டொப்”.. அய்யய்யோ.. பலூன் வெடித்துவிட்டது.. 

மாறன் திகைத்து செயலற்று போனான். எப்படி..? 
இன்னும் பாதி அளவுகூட வரவில்லையே என யோசிக்கும் முன் பார்வதி தாண்டவமாட ஆரம்பித்தாள். 

மாறனுக்கு விபரீதம் புரிய ஆரம்பித்தது. அம்மாவிடம் காசில்லாத நேரத்திலா இப்படி நடக்கணும். பார்வதியிடம் எவ்வளவோ கெஞ்சியாகிவிட்டது.. பலனில்லை.. 

“நீதானே உடைச்சே” என புரண்டு விம்மினாள்.

---

அம்மா தண்ணீர் எடுத்து வீடு நோக்கி வரும்மட்டிலே பார்வதியின் அழுகுரல் கேட்டது.
சிதறிய பலூனில் சில துண்டுகளை மாறனின் கையில் பார்த்ததும் “என்னடா ஆச்சு..?” என்றாள். 

“உடைச்சுட்டான்மா” என்று தேம்பினாள் பார்வதி. கூடவே எனக்கு பலூன் வேணும் என்று அடுத்த குண்டை தூக்கி போட்டாள்.

“அம்மா.. ஊதிக்கிட்டு இருக்கையிலே வெடிசிட்டும்மா, நா ஒண்ணுமே பன்னல” என்றான். இனி எப்படி பலூன் வாங்குவது என தெரியாது அம்மா ஆத்திரத்தில் அவன் கன்னத்தில் பளார் என்று ஒன்று விட்டாள். அது அவன் தவறு இல்லை என்று நன்கு தெரியும் அம்மாவுக்கு. ஆனால் அவளுக்கு அது ஒரு கிலோ அரிசிக்கான காசு.

பார்வதியின் அழுகை ஓயாது என்பது தெரிந்த ஒன்று. பக்கத்து வீட்டில் போய் மூணு ருபாய் கைமாத்தாக வாங்கி வந்தால் அம்மா.

“டேய். நீ என்ன பண்ணுவியோ தெரியாது.. இந்தா பிடி. பலூனு வாங்கி கொடுத்துடு இவளுக்கு. கிளம்பு” என்றாள் அம்மா.. “மஞ்ச பலூனு” என்றாள் பார்வதி.

“அம்மா.. நா எப்படி அவ்வளவு தூரம் போயி வாங்குறது. அவருகூட இந்நேரம் போயிருப்பாரே.! என்று கலவரத்துடன் விம்மினான்.

“நீதானே உடைச்சே.. போய் வாங்கு.” என்றாள் அம்மா.. “ஏய்.. அழுகாம வீட்டுலையே இருடி” என பார்வதியையும் அதட்டிவிட்டு தண்ணீர் தூக்க சென்றாள் அம்மா.

----

ஓட்டமும் நடையுமாய் கோவிலை நோக்கி சென்றான் மாறன். அவன் கோவிலை அடைகையில் மணி எட்டு இருக்கும். கோவில் வாசலில் குளித்து சீராக அமர்ந்திருந்த பிச்சைக்காரர்களை தவிர வேறு ஒன்றுமில்லை.

“போச்சு.. இந்த பலூன் கடைக்காரரை எங்கே..” வசமாக சிக்கியதாக கலவரப்பட்டான் மாறன். “என்னப்பா தேடுற” என்றார் ஒரு பிச்சைக்காரர்.

“பலூன் கடை.....” 

“அவரு போயட்டருப்பா..”

“எப்போ போனார்.. எந்த பக்கம்” என்றான்.. பிச்சைக்காரர் காட்டிய திசையில் ஓட்டம் பிடித்தான். பட பட என இருதயம் முழங்கியது. தொண்டை வறண்டு போய்டும் போல. பத்து நிமிடத்துக்கு அப்புறம்..  சட்டென்று திகைத்தான்..

அதோ.. அவருதான்.. மனசு ஏதோ நிம்மதி அடைந்த வேகத்தில் அவரை அடைந்தான்.

“பாலூனு..” என்றான். 

“மூணு ரூபா” என்றார்.. 

“மஞ்சள் பாலூன கொடுங்க” என்றான்

--

காலை பத்து மணி. வீட்டை அடைந்தான் மாறன். 
பார்வதி பலூனை பார்த்ததும் மலர்ந்தாள். 

“இப்பவாச்சும் ஒழுங்கா ஊதிக்குடுடா” என்றாள் அம்மா காய்கறி நறுக்கிக்கொண்டே.

குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு ஊத ஆரம்பித்தான் மாறன்.. இந்த முறை சீராக கவனமாக ஊதினான். விதி விளையாடிற்று என்பது சரியாகாது.. சிலருக்கு கூத்து கட்டி கும்மாளமே அடிக்கும்.

“டொப்”...............................  இந்த முறை அதிக சத்தத்துடன் சிதரியது மஞ்சள் பலூன்.. அதிர்ச்சியில் அரிவாள்மனையில் அம்மா கையை நறுக்கிகொண்டாள்.

மாறன் பார்வதியை முந்திக்கொண்டு ஓவென அழ ஆரம்பித்தான். பார்வதியோ துடித்துப்போனாள். மாறனின் இருதயமும் பாலூனின் சிதறிய துண்டுகளோடு ஆங்காங்கே ஒட்டிக்கொண்டது.

“போச்சு.. எல்லாம் முடிஞ்சு போச்சு” என மாறன் நினைத்து கரைந்தான்.

அம்மா, வெளிறிய முகத்துடன் தன்னை பார்த்து பயந்து அழும் மாறனையும், பலூனுக்காக அழும் பார்வதியையும் பார்த்து உறைந்து போனாள்.. 

இயலாமை என்பது அவள் கன்னத்தில் ஓங்கி அறைததுபோல அம்மாவின் முகம் வெளிறிற்று.

வறுமையின் உச்சம் என்பது இயலாமைதான் போலும். 

இந்த அழுகைகள் அடங்க எத்தனை நாள் ஆகும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்..


சீனிச்சேவில் எறும்பு மொய்க்க துவங்கியிருந்தது..!!

 ------------------------------------------------------------------------------------------------------------------
-    பூங்குன்றன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...