கஜா... அழிவின் நிகழ்காலம்..!
(கஜா புயலின் அன்றைய மாலை வேளை)
நெத்தியில் நெலா கணக்கா
சுத்துப்
பொட்டுவச்ச பூவாயி
கார்மேகம் சூழும் முன்னே
ஊருக்குள்ள
போக எண்ணி
வெரசாத்தான் அவ நடக்க
தூறல்
மொத்தம் வெரட்டி வர
ஓட்டமும் ஓடி நடையுமாத்தான்
வீடுவந்து
வேர்த்து சேர்ந்துவிட்டாள்
நாலுநாளா மக்க காத்து நிக்கும்
எங்க
கண்ணும்கூட வேர்த்துப் பார்க்கும்
சொன்ன மழை அப்போ இல்ல
இன்ன
சொல்லாம இங்க வந்ததென்ன..
நம்பி அவ துவச்சு போட்ட
மஞ்சப் புடவை இன்னும் ஈரத்தோட
காயும் முன்னே வந்த மழை
ஈரம்
காயுமுன்னே கால் நனைக்க
இராத்திரிக்கு அந்த மொத்த ஊரு
அடை
மழைக்குள்ள நனஞ்சு போக
மிச்ச மீதி மேட்டைக் கூட
பேயும்
கருத்த மழை நெறச்சிருக்க
மொத்த மேகம் பொத்துகிச்சோ
பூமி
தெச மாறி சுத்திடுச்சோ
அலையும் காத்து மழை தாங்கலியே
எந்த
சாமிக் குத்தம் வெளங்கலியே
காஞ்ச பூமிய விட்டுப்புட்டு- மழை
வெளஞ்ச
மண்ணில் கொட்டிப்புட்டு
சன்னல் வழி வழிஞ்ச தண்ணி
திண்ணை
வரை நெறஞ்ச தண்ணி
பக்கத்து ஓட்டுவீடு ஒருபக்கம்
சாஞ்சுபோக
பூவாயி
கூரவீடு பிச்சிகிட்டு மாஞ்சுபோக
மொத்தமழை பூவாயி தலைமேல தாரைவாக்க
கால்வைக்கும்
அடுத்தஅடி உள்வாங்கி முங்கிப்போக
ஒசந்து நின்ன தென்னை எல்லாம்
குச்சி
போல ஒடிஞ்சு விழ
அவ வளர்த்த தேக்கு மரம்
தென்னைக்கு
தொனைபோல சேர்ந்துகிச்சு
எப்போத்தான் விடியுமுன்னு பூவாயி படபடக்க
ஒப்பாரி
சத்தமொன்னு அவகாதில் வந்துசேர
அப்பொத்தான் கடந்திருக்கும் நட்டநடு
சாமமிது
விடியட்டும்
தெரியுமந்த எழவுவீடு யார்வீடு..?
-
பூங்குன்றன்

கருத்துகள்
கருத்துரையிடுக