முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மெய்ப்பொருள் காண்பது அரிது.!





இனி காலம் செல்லாது

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.!

நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய்.

இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும்.

கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றது, பெற்றது என  இன்னும் இதுபோல ஆயிரமாயிரம் சொல்லிக்கொண்டே போகலாம்.!

       கடலை விட அகண்டது, ஆழமானது, கட்டற்றது இணைய தகவல்கள் என்றால் மிகையன்று. எல்லாமே உண்மையான தகவல்தான் என நம்பி எடுத்து பார்த்து, படித்து, பருகி,  பகிர்ந்து, வியந்த காலம் எண்ணிப்பார்க்கையில் மலைப்பாய் இருக்கிறது.

       அதில்தான் கடந்த சில ஆண்டுகளாய் நஞ்சை கலந்துவிட்டார்கள் நாசக்கார கயவர்கள். எடுத்து தகவல்களைப் பருகிய காலங்கள் மாறின, இந்த தகவல்  உண்மையிலேயே உண்மைதானா என உண்மையான குழப்பம் வரும் அளவுக்கு மாறிவிட்டது இன்றைய இணைய தகவல் களஞ்சியங்கள்.

தேனீ வாயில் புகுந்த தேனாக இருந்த இணைய தகவல்கள் தேனடைகலாக சேகரிக்கப்பட, அதை எடுத்து பயன்படுத்திய காலம் மாறியது. வெறி கொண்ட நாயின் பற்களில் சிக்கிய துணிபோல தகவல் கிழித்து தொங்கும் அளவிற்கு சீரழித்துவிட்டனர்.! எது உண்மை, எது பொய்மை என அறியாவண்ணம் பொய்யில் மெய் முலாம் பூசி, பொய்யை மெய்யைவிட அதிகம் பரப்பி, மெய் தகவல் தேடி அலைந்தாலும் அதிகமதிகம் பொய் தகவலே வரும்படி ஓயாது உழைக்கிறார்கள் இந்த கொடூரர்கள்.

       தகவலை மாற்றுவது, பொய்யை திணிப்பது, தேவையற்றதை பெருவாரியாக உலாவ விடுவது, தரமற்றதை தாமாய் வந்து புகுத்துவது என பலபல வித்தைகளை கற்று முகம் மறைத்து அகம் அறுக்கிறார்கள். இது தகவல் தீவிரவாதம்.
      
       இணையத்தில் தகவலை விட வேகமாய் செயல்படும் இந்த தரம்கெட்டவர்களிடம் இருந்து தப்பிக்கவே பல மணிநேரம் யோசித்து கிடக்க வேண்டியுள்ளது. போதாத குறைக்கு பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற அதீத செயலிகள் உண்மை தகவலை விட பொய்களை அசுர வேகத்தில் பரப்ப கைகொடுக்கின்றன என்பது மிக வருந்தத்தக்கது.! ஒரே செய்தி வேறு வேறு தவறான தகவல்களுடன் திரிக்கப்பட்டு பல செய்திதாள்களில் வருவதை விட கொடுமையானது இது. வேகம் மிக மிக அதிகமானது இது.

       இனி காலம் செல்லாது, பலப்பல இணைய தகவல்களும்தான்.! நம்பி வாசித்த பல தகவல்கள் பொய் என பின்னர் தெரியும்போது பல சங்கடங்கள், மன வேதனைகள் ஒட்டிக்கொண்டு வருகிறது.! அதின் விளைவுகளில் இருந்து மீண்டு வருவதும் கொடுமைதான். இதை தவிர்க்கவே இன்று இணையத்தில் பல வலைத்தளங்கள் முளைத்துள்ளன, இவை அவ்வப்போது அதிகம் பரபரப்பூட்டிய தகவல்களை உண்மையா அல்லது பொய்யா என ஆராய்ந்து ஆதாரத்துட்டன் பதிவிடுவது ஒரு சிறு ஆறுதல். ஆனால் அதற்குள் பல கோடி பேருக்கு அந்த தகவல் போய்விடும் என்பது அந்த சிறு ஆறுதலையும் அலைகழிக்கிறது.!

இருபது ஆண்டுகளுக்கு முன் எது தகவல் களஞ்சியம் என அறியப்பட்டதோ அதின் மீதே சந்தேகம் உருவாக்கி களஞ்சியத்தை கலைத்துப்போட்டார்களே களவாணிகள்.!

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். ஆனால் இக்காலத்தில் மாற்றம் எனும் அந்த வார்த்தையைக்கூட  மாற்றிவிடுவார்களோ என ஐயம் ஆளுகிறது மனதை.!


மெய்ப்பொருள் காண்பது அரிது.!

குமுறல்களுடன்..!

-     பூங்குன்றன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...