பறவைகளைத்
தேடும் கூடுகள்
வாழ்வும்
வளமும் எதில் கட்டமைக்கப்படும் என்பதே இங்கு பெரிய தேடலாய் இருக்கிறது.
பள்ளத்தூரில் நான் பார்த்து வியந்த வீடுகளின் பிரமாண்டம் பெரிது. நம்ம ஊருகளில்
இருக்கும் தெருக்களில் நூறு நூற்றைம்பது வீடுகள் உள்ளது. அதுவே அங்கு இரண்டு
அல்லது நான்கு வீடுகளுக்கே போதாது. வீதிகள் ஊரை கிழிக்கும் நேர்க்கோடுகள்.! அத்துணை
துல்லிய கட்டமைப்பு. பெரும் திண்ணைகள், இரும்பு போன்ற மரத்தூண்கள், இரண்டடுக்கு
கொண்ட ஓட்டு வீடுகள், வெளியே உள்ள திண்ணைக்கு சற்றும் சளைக்காமல் பிரம்மாண்டமாய் வெளிச்சம்
நிறைந்த நடு முற்றம், அதில் இருந்து மழைநீர் வெளியேற வழித்துளைகள்.! வீடு நிரம்பிய
உறவுகள், மாபெரும் குடும்பப்பறவைகளின் சிறந்த கூடு அது.!
ஆம்..
செட்டிநாட்டு வீடுகள் ஒரு பெரும் கூடுகள்தான்.!
உறவுகளும்
உணர்வுகளும் பிறப்பித்த பிரம்மாண்ட வீடுகள் பல இன்று வெறிச்சோடி கிடக்கின்றன.
சந்ததிகள் பல வேறு நாடுகளில் சென்றுவிட, தாத்தா பாட்டிகள் விழுதுகளை இழந்த
ஆலமரமாய் தள்ளாடி, வெற்று மனதோடு அந்த நிசப்தம் விழுங்கிய வீடுகளுக்குள் நினைவுகளை
சுமந்து கிடக்கின்றனர்.
பறவைகளைத் தேடும் கூடுகள்
மண்ணின் நிறம் தெறிக்கும் வீடுகள்
சீமையோடு மூடிப்போட்ட நேர்க்கோடுகள்
கொல்லைபுறமில்லா வாசல்கள்
இருவாசல் இணைக்கும் நேர் வீதிகள்
குரங்கது வந்துபோகும் அனுதினமும்
கூட்டமாய் பட்சிகளும் இரைகாணும்
மிதிபட்ட இடமெல்லாம் நீரூறும்
மண்ணின் மணம் மாறாதெந்நாளும்
கட்டிடக்கலைக்கோர் பொற்காலம்
ஒவ்வொரு சன்னலுக்கும் வர்ணசாலம்
திண்ணைக்கும் வாசலுக்கும் போட்ட கோலம்
அரைப்படி மாவேனும் அதுக்காகும்
அப்பச்சிக்கும் ஆச்சிக்கும் ஒரு பக்கம்
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு பக்கம்
சித்தப்பா வகையறாக்களுக்கு ஒரு பக்கம்
சின்னத்தாத்தா பெரியத்தாத்தா ஒருபக்கம்
மாமன் மாமி வந்துவிட்டால் ஒருபக்கம்
மற்றயாரும் வந்தாலோ ஒருபக்கம்
நாற்புறமும் பல அறைகளுள்ள வீடுகளே
வழிபோக்கருக்கும் பெருந்திண்ணையுள்ள வீடுகளே
வருசத்துக்கு அஞ்சாறு கல்யாணம் காதுகுத்து
வந்துபோகும் உறவுதானே மொத்த சொத்து
பாகம் பிரிச்சாலும் நடுமுற்றம் பொது
உறவுக மாறாத ஊர்க இன்னுமிருக்குது
ஒருவீட்டு சனங்களுக்கே இரண்டு பந்தி
பெருங்கூடுகட்டி பறவைகளாய் இருக்கும் சந்ததி
காலம் போட்ட கோலமென்ன யாருகண்டா – இந்தக்
காலம் போட்ட கோலம்மாற வழியுமுண்டா
பொழப்பு தந்த மக்க கூட்டம் பொழப்பு தேடி
போனதென்ன கூடுவிட்டு கடல தாண்டி
வீட்டுக்குள்ள செடிமொளச்சு கெடக்குதடி – இந்த
சொர்க்கபூமி மாறிடுமோ பழையபடி..!?
தூரத்தில்
நினைவுகளுடன்..!
மு.பூங்குன்றன்


கருத்துகள்
கருத்துரையிடுக