“பிரச்சினைகளால் நேரிடையாக
பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து”
- யாரோ..
வீட்டுக்கு போக ஐந்து பாதைகள்
இருந்தன....
அதில் இலகுவான பாதையை எப்போதும்
தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.!
திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ
எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே
டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும்.
இப்போது செல்லும் இரண்டாவது பாதையில்
அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து
வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு
நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு
செய்தான்.
மூன்றாவது பாதை சற்று கூடுதல்
கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய்
இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய்
வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது. டிங்கு வெறுப்படைந்தான்.
இப்படியே நான்காம் பாதையிலும்
இடையூறுகள் பெருக வேறு வழி இல்லாமல் ஐந்தாம் பாதையாகிய மீதமுள்ள அந்த கடைசி ஒரே
வழியை தெரிவுசெய்தான் டிங்கு. இதுதான் மீதமுள்ள ஒரே வழி வீட்டுக்குப் போக. எனவே
வேறு வழி இல்லாமல் போனது டிங்குவிற்கு.
ஆனால், அவன் நினைத்ததுபோலவே இப்போது
அந்த மீதமுள்ள ஒரே ஒரு வழியிலும் முட்களை யாரோ போடுவதும், மரங்களை வெட்டி
சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஒதுங்க நிழலே இல்லாமலும் ஆக்கியது அதிர்ச்சியை தந்தது, டிங்குவிற்கு
தாங்க இயலவில்லை.
என்னை சுற்றி என்ன நடக்கிறது என
நிதானிக்க துவங்கினான். என் வாழ்க்கையில் இடையூறு தருவது யார். இனி எப்படி
நிம்மதியாய் வீட்டுக்கு போவது என கடும் மன உளைச்சலுக்கு டிங்கு ஆளானான். இருக்கும்
இதையும் இழந்துவிட்டால் இனி வீடு கூட எனக்கு மிச்சம் இருக்காது என்பதை டிங்கு
கடைசியில் உணர்ந்தான். வேலை வேலை என்று இருந்ததால் தனது உரிமைகள் ஒவ்வொன்றாய் பறிபோனதை
கடைசியில் உணர்ந்தான்.
எனவே, இன்றைக்கு என்ன ஆனாலும் சரி,
வேலை ஒருபக்கம் கிடக்கட்டும், சாகும்வரை வேலை பார்க்கத்தானே போகிறேன். ஆனால் வாழவே
இடையூறு வருகிறதே என எண்ணிக்கொண்டு, இதை யார் செய்கிறார்கள் என பார்த்துவிட வேண்டும்
என காலையில் மண் புதர் அருகே மறைந்திருக்கலானான்.
சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு உருவம்
அங்கு தூரத்தில் பாதை நெடுக முட்களை போடுவதும், மிச்சம் மீதம் உள்ள மரங்களை வெட்டிச்
சாய்ப்பதுமாக இருப்பதை கண்டு கடும் கோபத்துடன் அந்த உருவத்தை நெருங்கினான்.
நெருங்க நெருங்க டிங்குவிற்கு
அதிர்ச்சி காத்திருந்தது. அது வேறு யாருமல்ல. எப்போதும் பயன்படுத்திய அந்த முதலாம்
பாதையில் நின்று தன்னை போக விடாமல் இடையூறு செய்த திமோதான் அது.
டிங்கு ஆத்திரத்தில் திமோவின் தோளை
பிடித்து உலுக்கினான்.
‘அடேய்.. உனக்கு நான் என்ன பாவம்
செய்தேன். எனக்கு ஏன் இந்த துரோகம் செய்கிறாய்’ என கொதித்தான்.
திமோ தன் கையில் உள்ள கோடாரியை
ஓங்க, டிங்கு அதிர்ந்தான்.
‘அட, கிராதகா.. நான் தமிழில்
பேசுவது உனக்கு புரிகிறதா இல்லையா? முதலாவது பாதையை நீ ஆக்கிரமித்து போக விடாது
தடுக்கும்போதே நான் உன்னை விரட்டியிருக்க வேண்டும், அல்லது எனது குறைந்த பட்ச
எதிர்ப்பாவது காட்டியிருக்க வேண்டும். நான் வம்புகளை விரும்பாமல் ஒவ்வொரு
பாதையிலும் இடையூறு விளைகையில் என்ன நடக்கிறது என நிதானிக்காமல் கடந்து வந்தது
பெருந்தவறு. இப்போதும் உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். இங்கிருந்து போய்விடு,
என்னை என் வழியில் வாழ விடு’ என்றான்.
ஆனால் திமோ அதற்க்கு மசியவில்லை.
கோடாரியை ஓங்கி டிங்குவை எதிக்க தயாரானான். இன்னும் ஓரிரு நொடிகளில் டிங்கு தன
மண்டை உடைபடும் என்பதை உணர்ந்தான். இனி பேசி பயனில்லை என்பதையும் உணர்ந்தான்.
சட்டென, தனது மண்டை நோக்கி வரும்
கோடாரியை பிடித்து இழுத்து ஆக்ரோசமாய்
திமோவை பார்த்து கர்ஜித்தான்,
‘என் இனம் அறம் சார்ந்து வாழ
பழகியது. ஆனால் அடக்குமுறைகளுக்கு அஞ்சாது’ என்று கோடாரியை திருப்பி காட்டினான்.
டிங்கு கோடாரியை மடக்கிய அசுர
வேகமும், அவனது பலமும், கர்ஜனையும் திமோவை நிலைகுலையச் செய்தது. இனி இந்த பகுதியில்
தனது ஜம்பம் பலிக்காது என எண்ணி அவ்விடம் விட்டு ஓடி மறைந்தான்.
பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே களைந்துவிடுதல்
நல்லது. இல்லவிடில் தலைக்கு கோடாரி வரும்போது தப்பிப்பது கடினமானது. பிரச்சினை
இருக்கிறதே என அதை ஆரம்பத்திலேயே எதிர்த்து போராடி பார்க்காமல் வேறு வேறு வழிகளில்
விலகிபோவது, இருக்க இருக்க பிரச்சினைகளின் எண்ணிக்கையையும் அதின் பலத்தையும்
கூடுதலாக்குமே தவிர அது நல்ல முடிவைத் தராது என டிங்கு எண்ணிக்கொண்டான்.!
தனது உரிமைக்காக போராடுதல் தவறல்ல. உரிமையை
ஒவ்வொன்றாய் இழந்துகொண்டே வந்தால் மிச்சம்
மீதி எதுவும் இருக்காது, பின்பு நான் என்ற அடையாளமே கேள்விக்குறியாகிவிடும் என
டிங்குவின் மனதில் பட்டது. ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு வீடு நோக்கி நடந்தான்.
திமொவின் அடக்குமுறையை ஒழித்ததால் இப்போதெல்லாம்
டிங்கு எப்போதும்போல தனது முதலாவது பாதையிலேயே பயணித்தான்.!
நீதி : நம்மை சுற்றி என்னதான்
நடக்கிறது என்பதை நிதானிக்காதவரை கோடாரிக்கும் நமது தலைக்குமான இடைவெளி குறைந்துகொண்டே
வருகிறது என்பதை உணர இயலாது.
அன்புடன்
மு.பூங்குன்றன்

கருத்துகள்
கருத்துரையிடுக