முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“செவ்வாய் கிரகத்தில் விலங்கின் தொடை எலும்பும் வடக்கு சென்டினல் பழங்குடிகளும்”




புதியன புகுத்துதலில் ஏற்பட்ட மாற்றங்களே மனித சமூகத்தின் மாற்றத்திற்கான அத்தாட்சியாக இருந்துவருகிறது. சூழல்களை தனக்கு ஏற்றார்போல மாற்றி அமைத்துகொள்வதில் மானுடத்திற்கு நிகரில்லை.

தேடல் மனித குல வாழ்வை உற்சாகமாக மாற்றிவிடுகிறது என்பது மிகையல்ல. ஆனால் மிகையான தேடல்கள் மானுடத்தை ஏதோ ஒரு அசுர குணத்தை நோக்கி உந்தி தள்ளுகிறது.

சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் விலங்கின் தொடை எலும்பு போல ஒரு புகைப்படத்தை அந்த கிரகத்தில் தனிக்காட்டு ராஜாவாக சுற்றி திரியும் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பியது. இது போதாதா..?

இது இப்படியே இருக்கட்டும்.

 

சற்று அந்தமான் சென்டினல் (1771ல் பிரிட்டிஷ் கம்பெனி இப்பெயரை வைத்தது என்கிறார்கள், சென்டினல் என்றால் காவலாளி என பொருள்)  தீவு பக்கம் நடந்ததை பார்க்கும் முன்.. 

அங்கு சென்று கொல்லப்பட்ட ஜான் ஆலனின் டைரி குறிப்புகளில் இருந்து கிடைத்த ஒரு செய்தி பின்வருமாறு..

மூன்றாவது நாள் அங்கு சென்றபோதே அவருக்கு தனது மரணம் பற்றி தெரிந்திருக்கிறது. அதனாலேயே, "நான் சூரியன் மறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அழகாக உள்ளது. அழுகிறேன். இதுதான் நான் பார்க்கும் கடைசி சூரிய அஸ்தமனமா என்று தெரியவில்லை" என எழுதியிருக்கிறார். மீண்டும் மீனவர்களை சென்டினல் பகுதியில் விடுமாறு கூறியிருக்கிறார். அடுத்த நாள் மீனவர்கள் வந்தபோது பழங்குடிகள் ஜான் சாவின் சடலத்தை இழுத்துக் கொண்டிருந்ததையே மீனவர்கள் பார்த்துள்ளனர்.

இது முதல் முறை அல்ல.. பல கரை ஒதுங்கிய கப்பல் மாலுமிகளையும், வேண்டுமென்றே தீவுக்குள் நுழைந்தவர்களையும் அழித்துள்ளனர். தங்களை காத்துக்கொள்வதற்காக.


எத்தனையோ மனிதர்களை தங்கள் எதிரிகளாக எண்ணி அழித்த பழங்குடிகள் அவர்கள் என்பது நன்கு தெரிந்தும் மீண்டும் மீண்டும் அங்கு சென்று அவர்களை இந்த மானுடம் சீண்டுவது ஏன்..? உலக பொது உறவுகள் சாயம் படாது தங்களின் தீவே தங்களின் உலகம் எனும் எண்ணத்தில் வாழும் மக்களிடம் செல்ல ஏன் துடிக்கவேண்டும்.


இந்த அறிவியல் வளர்ச்சி உலகில், எதையும் துழாவி பார்க்கும் எண்ணம் எப்படி உதிக்கிறது. அரசு போக கூடாது என தடை விதித்த தீவிற்குள், கடல் எல்லை பாதுகாப்பு படைகளின் கண்களில் படாது சென்றிருப்பது ஆபத்தான விடயமே. தெரிந்தது இத்தனை.. தெரியாது இதுவரை சென்று வந்தவர்கள் (இறந்தவர்கள்) எத்தனை எத்தனையோ.


இவை எல்லாவற்றிக்கும் மேலாக, பக்கத்தில் இருக்கும் தீவே உலகமாக வாழும் பழங்குடிகளாகட்டும், சிறு புள்ளியாய் கண்ணில்படும் வெகு தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திலாகட்டும், தங்களின் அதீத தேடல்களின் பசிக்காக எங்கும் நுழையும் அதிகாரம் யாரிடம் இந்த அறிவியலில் வளர்ந்தாய் பிதற்றிக்கொள்ளும் மானுடம் பெற்றது.


ஒரு கிரகமாகட்டும் ஒரு தனித்து விடப்பட்ட தீவாகட்டும் அதை அதின் தன்மை அறியாது சீண்டும் போக்கு மிக ஆபத்து என்பதை அந்த தீவில் தன்னை தற்காத்துக்கொள்ள கையில் கத்தியுடன் காணப்படும் சிறுவனின் நிலை உணர்த்தவில்லையா..?


சென்டினல் தீவு நிலை இப்படி என்றால், அந்தமானில் இருக்கும் பழங்குடி இன மக்களின் நிலையை மிக மோசமான படிநிலைக்கு நாம் தள்ளியுள்ளோம். சுற்றுலா காட்சிப்பொருளாக, விலகுகள் போல நாம் வீசும் உணவு பொருளுக்காக அலைபவர்களாக, காம வெறி கொண்டு அலையும் நவீன காட்டுமிராண்டிகளுக்கு இரையாகும் மக்களாக அவர்களை அவர்களின் இருப்பிடத்தினுள் நுழைந்து துரத்திக்கொண்டு அதை சாதனையாக அரங்கேற்றிக்கொண்டு நிற்கிறோம்.

கடைசியாக ஒன்று.

அறிவியல் வளர்ச்சியின் போதை பித்தேறி அதீத தேடல்களில் பறந்து திரியும் மானுடத்திற்கு சென்டினல் காவலாளிகள் கூறுவது கீழ்க்கண்டவாறாகவும் இருக்கலாம். ,
“எங்களை எங்கள் உலகில் சமாதானமாக வாழ விடுங்கள், ஒருவேளை நீங்கள் செவ்வாய் கிரகத்திற்கு மேய விட்ட கியூரியாசிட்டி ரோவர் உங்களை சீண்டிப்பார்க்க புறப்படும் வேற்று கிரகவாசிகளின் புகைப்படங்களையும் விரைவில் அனுப்பக்கூடும்”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...