தீபாவளி காலங்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவ்வப்போது
வெடிச்சத்தம்.. தீபாவளி வரும் நாளை நினைத்து நினைத்து புரட்டி எடுத்ததால் விவேகானந்தா
காலண்டரின் பக்கங்கள் கிழிந்து தொங்கிற்று.
நாள் நெருங்க நெருங்க தெருவில் நடக்க சற்று பயம்
எனக்கு தொற்றிக்கொண்டது.. போன வருஷம் இப்டித்தான் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு
வர்ற வழியில் பக்கத்து தெரு பசங்க வெடியை வச்சுட்டாங்க..
டுப்பே’ன்னு வெடிச்சுது. யம்மாடி.. அலறி ஓட்டம்
பிடிக்கையில் பார்த்து சிரிக்குறானுங்க.. ஏன்டே, ஆறாவது படிக்குற, வெடிக்கு இப்டி
பயப்புடுற என பகடி செய்தார்கள். ச்சே.. பெருத்த அவமானம்.. இந்தமுறை காலுக்குள்ளே
வீசிடுவாங்க போல. யய்யாடி.. கவனமா இருக்கணும் என் நடந்தேன்.
--------
துணி எடுத்து தைக்க குடுத்தாச்சு. முறுக்குக்கு
மாவு அரசாச்சு.. ஆமா.. இன்னும் மூணு நாள்தான்.. டம்..டும்.. டமால்.. தீபாவளி
வந்துரும்..
போன வருடம் மீந்த சில ஊசி வெடிகளை தேடி
எடுத்தேன்.. அட.. ஒரு முழு பாக்கெட்டும் இருக்குதே என ஆச்சர்யமாக இருந்தது.. இத
எப்படி விட்டு வச்சேன் என குழப்பம் தீரும் முன், அம்மாவின் குரல்..
“அடேய்.. கவனமா வெடிக்கனும்.. “
“சரிம்மா” (கவனம் முழுவதும் மீதமுள்ள வெடிகளை
நோண்டுவதிலேயே இருந்தது)
“வெடி எல்லாம் பலசுடே.. வெடிக்கலன்னா விட்டுடு..
வெடிக்காத வெடியை போய் எடுக்க கூடாது, திடீர்னு வெடிச்சிடும்டே”
“தெரியும்மா..” வாசலை நோக்கி ஓடினேன் பற்றவைத்த
ஊதுவத்தியுடன்..
------
“டப்..” (ஆமா.. ஊசி வெடிக்கு இவ்ளோ சத்தம்தான்
வரும்)
அந்த சத்தத்துக்கே என் நண்பர்கள் கூடிவிட்டனர்..
“டே.. ஆளு.. வெடி வாங்கிட்டிங்களா உங்க
வீட்டுல..?”
“இது போன வருஷம் வசிருந்ததுடே.. கார்த்திகைக்கு
வெடிக்கலாம்னு வச்சிருந்தேன். ஆனா அப்ப வெடிக்கலை.. மறந்துட்டேன்..” இளித்தேன்..
ஆளாளுக்கு நா ஒன்னு நீ ஒன்னு என வெடிக்க
ஆரம்பிச்சோம். பழைய வெடி என்பதால் பாதிக்கும் மேல் வெடிக்கவே இல்லை.. “பொறக்கி
புஸ்வானம் போடுடே என்றார்கள்”.. ஆத்தாடி..
அங்கதனே சிக்கலு..
வெடிக்காத வெடி எல்லாத்தையும் எடுத்து புஸ்வானம்
பற்றவைப்பது ஒரு கலை என கூறலாம்... வெடியை பிரிச்சு மருந்தை ஒரு பேப்பரில் கொட்டி,
அதின் ஓரத்தை கவனமா பற்றவைத்தால்.. ஆஹா.. அணுகுண்டு போட்ட மாதிரி எரிந்து புகை
எழும்பும். அதுவே புஸ்வானம் என்போம் நாங்கள்.
ஆனால் அம்மா
ஏற்கனவே அது பாதுகாப்பு இல்லை என்று சொல்லிட்டாங்க. ஆனாலும் மனசு கேட்கலை..
கிட்டத்தட்ட நாற்பது வெடிகள் வெடிக்காது திரி மட்டும் கருகிப்போய் கிடக்குது..
புஸ்வாணமா பத்தவச்சா சூப்பரா இருக்கும்.. ஆனா இப்போ எடுக்க பயமா இருக்கு..
விட்டுட்டு வந்துட்டா பயலுக எடுத்துட்டு போய்டுவானுங்க.
எல்லாத்தையும் அள்ளி ஒரு பேப்பரில் மொத்தமா
போட்டு முட்டை போண்டாவை போல மடிச்சு வச்சேன். அம்மா கண்ணில் படாம இருக்க பழைய
பேப்பர்கள் குப்பைகள் போடும் மூலையில் போட்டு வச்சேன்.. தீபாவளி அன்னைக்கு
புஸ்வானம் கொளுத்திடலாம், அம்மாவுக்கு தெரியாது என மனசுக்குள் எண்ணினேன்.
----
தீபாவளி அதிகாலை..
“சொத்.. சொத்..”
வெடிச்சத்தம் இல்லைங்க.. என் முதுகில் விழுந்த
அடிச்சத்தம்..
ஏன்பா புள்ளைய போட்டு தீபாவளியும் அதுவுமா
அடிக்குற.. எண்ணை தேச்சு குளிக்க அடம் பிடிக்குறானா என்றார்கள் பக்கத்து வீட்டு
அத்தை.
“அட.. அது இல்லக்கா.. குளிப்பாட்ட சுடுதண்ணி போட
அடுப்பு பத்த வச்சேன்.. நாலஞ்சு பேப்பர அடுப்புல போட்டு எரிச்சா, டம்மு டும்முன்னு
வெடிச்சிடுச்சு.. அடுப்பங்கரை பூரா புகை மண்டலம்.. இந்த பய எதிலையோ வெடியை கட்டி
வச்சிருந்திருக்கான்” என அம்மா பதில் சொல்லிவிட்டு இன்னும் ரெண்டு வாங்கு
வாங்கினார்கள் என்னை..”
“மன்னிச்சிடு தாயே..”
“மன்னிப்பு.?...” மீண்டும்.. சொத்.. சொத்..
அடியை கூட தங்கிக்கலாம்.. ஆனா நான் புஸ்வானம்
விட எண்ணிய நெனப்பு புஸ்வாணமாகி போனதே எனக்கு வருத்தமா இருந்துச்சு.. ஆனால்..
மறுகணமே ...
புத்தாடை... கூடவே மூணு வடை, ஐந்து சுழியம்,
ரெண்டு அதிரசம், ஒரு முறுக்கு ... சும்மா லபக்”கிட்டு கை நிறைய வெடிகளுடன்
ஊதுவத்தியை பத்தவசிகிட்டு தெருவை நோக்கி வீறுநடை போட்டேன்.
n பூங்குன்றன்

கருத்துகள்
கருத்துரையிடுக