முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 பொறுப்பும்... துறப்பும்...!


மேலதிகாரி இந்த பொறுப்பு எனக்கு கொடுத்துவிட்டார் நான் எப்படியாவது இது முடித்தே ஆக வேண்டும் என்று கடமையே கண்ணாக நின்று பொறுப்பை நிறைவேற்றும் பலரை
நாம் பார்த்திருக்கிறோம்.


அது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் நம்மீதான நம்பிக்கைக்கும் கொடுக்கப்படும் ஒரு வாய்ப்பு. அதை சிறப்பாக செய்து முடிப்பது கடமையாக இருக்கலாம்.


ஆனால் வேறு பல பொறுப்புகளும் தனிப்பட்ட விதத்தில் இருக்கின்றன. அதில்  எல்லாம் மூக்கை நுழைத்து தான் மிகவும் பொறுப்பானவர் என்று நிரூபிப்பதற்காகவே பலர் பொறுப்புகளை அள்ளி சுமப்பார்கள். சிலவற்றை தூரிதமாக நிறைவேற்றுவார்கள் சிலவற்றை நிறைவேற்ற முடியாமல் வருந்துவார்கள்.


பொறுப்புகளுக்கும் நேரத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு.


ஒரு முறை ஒரு நண்பர் எங்கள் வீட்டில் இருக்கும் டிவியை பார்த்துவிட்டு இதே போல் டிவியை நாங்கள் வாங்க வேண்டும் என்று அவர் வீட்டில் உள்ளவர்கள் கூறினார்கள் எனவே இனியும் தாமதிக்காது நான் டிவி வாங்க வேண்டும் என்று அந்த டிவியை பற்றி அதன் தகவல்களை விசாரித்து குறிப்பு எடுத்துக் கொண்டார்.


நான் கூறினேன் கொஞ்சம் பொறுமையாக இருங்கள், இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் புதிய மாடல்கள் வர இருக்கின்றன அதில் எடுத்துக் கொள்ளலாம் என்றேன்.


ஆனால் அவரது குடும்பத்தினர் இந்த பொறுப்பை என்னிடம் கொடுத்து விட்டார்கள் இனி காலம் தாழ்த்த முடியாது என்று ஒரே வாரத்திற்குள் ஒரு டிவியை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்தார்.


பிறகு ஒரு மாதங்கள் கழித்து இந்த டிவியில் எச்டிஎம்ஐ போர்ட் ஒன்றுதான் இருக்கிறது யுஎஸ்பி போர்ட் ஒன்றுதான் இருக்கிறது என்று குறைபட்டுக் கொண்டார். 

கூடவே டிஸ்ப்ளே தெளிவும் மிக குறைவாக இருந்தது என்பதையும் அவர் கண்டறிந்து அவசரப்பட்டு விட்டோம் என்று உணர்கிறார்.


அவர் குடும்பத்தினர் இப்பொழுது அவரை குறை சொல்ல துவங்கி விட்டனர். ஒரு நல்ல டிவியை கூட வாங்க தெரியாதா என்று அவர்களின் கேள்வி சங்கடத்தை தான் ஏற்படுத்தும்.


பொறுப்பை துரிதமாக நிறைவேற்றுவது முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது அந்த பொறுப்பிற்கான தேவை என்ன என்பதை உணர்ந்து அதை முடிக்க சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும் தெளிவாக நிறைவேற்றுவது அதைவிட மிக முக்கியம். 


அலுவலகத்தில் கணினி பணிகள் வேகமாக பணியாற்றும் ஒரு இளம் வாலிபரை எங்களது மேல் அதிகாரி மிகவும் பாராட்டி மெச்சி கொண்டு இருந்தார். 

ராம்கியிடம் இந்த வேலையை கொடுத்தேன் எவ்வளவு வேகமாக முடித்து இருக்கிறான் பாருங்கள் என்றார்.


ஒரு வாரம் கழித்து அவர் முடித்த  150 கோப்புகளில் ஒரு கோப்பில் சந்தேகம் இருந்து அதை ஆராயும் பொழுது அது தவறான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து மேலதிகாரி திகைத்துப் போனார்.


அதே சந்தேகத்தை மீதமுள்ள 149 கோப்புகளிலும் ஆராய்ந்து பார்க்க சொல்லும் பொழுது அதில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட கோப்புகளில் அந்த தவறு (அதே தவறு) நடந்துள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்து திகைத்துப் போனோம்.!


அந்த கோப்புகளை துரிதமாக முடிக்க அவர் எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாரோ அதே அளவு இன்னொரு மடங்கு நேரத்தை அதை சரி செய்ய எங்களுக்கு ஆகிவிட்டது.


பொறுப்புகளை விரைவாக முடிப்பது அல்லது நேர்த்தியாக முடிப்பது என்பதற்கான வித்தியாசங்களை உணர்ந்து பொறுப்புகளை கையாளும் பொழுது சிறிது கால நேரங்கள் கூடினாலும் முடிக்கப்பட்டது முழுமையாக முடிக்கப்பட்டதாக இருக்கும்.!!


அந்த கால நேரத்திற்குள் நம்மால் இந்த பொறுப்பை நேர்த்தியாக முடிக்க முடியாது என்றால் இது என்னால் (அல்லது என்னால் மட்டும் இந்த நேரத்துக்குள் முடிக்க) முடியாது  என்று வெளிப்படையாக சொல்வது தான் மிக நல்லது.!


பொறுப்பை பொறுத்துச் செய்ய இயலாமல் இருப்பின் துறப்பதும்  அவரவர் பொறுப்புதான்..!



அன்புடன்

பூங்குன்றன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...