நான் ஆறாம் அல்லது ஏழாம் வகுப்பு படிக்கும் காலத்தில் பக்கதது வீட்டில் வயரிங் செய்திருந்த நேரம், அதற்கு சுவிட்ச் வாங்கும்போது அதை பொதிந்து வைத்திருக்கும் சின்ன அட்டைகளை வெளியே வீசி இருந்தார்கள். அட்டையில் இருக்கும் வண்ண கட்டங்கள் நிரம்பிய பகுதியை நான் கத்தரித்து வைத்திருந்தேன், நெடுநாட்களாக.. எதனால் என்று தெரியவில்லை... கலர் கலராக மிளிரும் அந்த ஜிகினா பகுதி ஒரு மனமகிழ்ச்சி கொடுத்தது..
ஒரு பிள்ளையார் சதுர்த்தி அன்று ஒரு அண்ணன் எனக்கு வர்ண கலவைகள் நிறைந்த பளபளக்கும் வகை வர்ணங்கள் தீட்டிய பிள்ளையார் சிலையை தந்திருந்தார்.
அதை பத்திரமா வச்சுக்க நினைத்து ஒரு தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டு பள்ளிக்கூடம் போய் விட்டேன்.. மாலையில் வீடு வந்ததும் முதல் வேலையாக தொட்டிக்குள் பார்த்து கதறியது உண்டு.
ஆம்.. வர்ணங்கள் எல்லாம் கரைந்து வெள்ளை மற்றும் ஆங்கங்கே களிமண் வெளியே தெரிந்த பிள்ளையார் சிலையாக தண்ணீருக்குள் கிடந்தது.. ரொம்ப கஷ்டமா போச்சு...
ஒரு பழைய பேப்பர் கடைக்கு போயி காமிக்ஸ் புக்கு ஏதும் வந்திருக்கா என்று பார்க்கையில் வெவ்வேறு வண்ண காகிதங்கள் உள்ள ஒரு பில் நோட்டை பார்த்து கிடந்து கெஞ்சி அந்த பேப்பர் கடை அண்ணனிடம் வாங்கி வந்தேன்.. மெல்லிய வர்ணங்களில்... வெளிர் பச்சை.. வெளிர் மஞ்சள்... வெளிர் நீளம்.. வெளிர் சிகப்பு என ஒவ்வொரு பக்கமும் ஒரு திரைப்படமாக இருந்தது எனக்கு...!
சாதாரணமாகவே பலரையும் போல எனக்கும் வர்ணங்கள் நிறைய பிடிக்கும்..
வர்ணங்களை கொண்டிருக்கும் பெரும்பாலான இயற்கை படைப்புகளும் பிடிக்கும்.. செயற்கையாக உண்டாக்கிய கலர் கோழிக்குஞ்சுகள் கூட கொள்ளை கொள்ளை அழகுதான்.. கூடைக்குள் கிய்யா முய்யா என உயிருள்ள வர்ணம் தோய்த்த தூரிகைகள் போல அவை..!
என்னுடைய வாழ்க்கையில் பல பாடல்களை அந்தப் பாடல்களுக்கு உண்டான நினைவுகளோடு நான் கடந்து வந்திருக்கிறேன்..
ஒரு சில பாடல்களை அரிதாய் காதுகளில் ஒலிக்கும் போது அந்தப் பாடல் தரும் நினைவுகளும் சேர்ந்து மனதில் நிழல் ஆட்டமாய் வந்து விடும்..
அதுபோலவே தான் வர்ணங்களும்..
சாலையில் நான் செல்லும்போது யாரேனும் ஒரு விதமான வர்ணத்தில் உடை அணிந்து இருந்தால் திடீரென அது எனக்கு ஒரு வித மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் இந்த வர்ணத்தை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று...!
நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது என்னை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது தஞ்சாவூரில் தும்பை செடியை வைத்து என் அம்மா எனக்கு வண்ணத்துப்பூச்சி பிடித்து தருவார்கள்...
ஒரு நாள் எனக்கு பிடித்து கொடுக்கப்பட்ட வர்ணத்துபூச்சியும் என் அம்மாவின் சேலையின் வர்ண கலவையும் ஒரே மாதிரி இருந்தது..!
அப்படி ஒரு வண்ணத்துப்பூச்சியை இன்று வரை மீண்டும் என்னால் பார்க்க முடியவில்லையே என்று சென்னை வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவரை தேடி வந்து விட்டேன்.. ஏனோ என் கண்ணில் அவரை மீண்டும் காட்சி தந்து என் பழைய நினைவுகளோடு ஒரு முறை பொருத்திப்பார்க்க வாய்ப்பு தரவில்லை..
எங்க அம்மா பிடித்து தந்த அந்த வண்ணத்துப்பூச்சியும், என் அம்மாவின் சேலையின் வர்ண கலவையும் எப்படி அச்சு அசலாக ஒரே மாதிரி இருந்தது..!?!
வெள்ளை நிறம் மஞ்சள் நிறம் ஆரஞ்சு நிறம் இது மூன்றும் கலந்த கலவயாக நிறம் கொண்ட வண்ணத்துப்பூச்சி.... என் அம்மாவின் சேலை..!
ஆழ்மனதை விட்டு நீங்கா வர்ணக்கலவைகள் அவை.!
செத்த பிறகும் கூட செத்த நேரம் இது என் நினைவில் இருக்கும்..!!
அன்புடன்
🌸பூங்குன்றன்
கருத்துகள்
கருத்துரையிடுக