முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எஜமான விசுவாசம் எனும் பேராபத்து

ஆண்டாண்டு காலமாகவே மன்னர் ஆட்சியிக்கும் முன்னரே இருந்து பண்ணை அடிமை முறை வரை பரவலாக இருந்தாலும் இன்றளவும் இதன் மீட்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

எ(வ)சமான விசுவாசம்.!!

ஒரு சின்ன மளிகை கடையிலும் தேநீர் கடையிலோ வேலை செய்யும் நபர்களாக இருந்தாலும் சரி பெரிய பெரிய மல்டிநேஷனல் கம்பெனிகளில் வேலை செய்யும் நபர்களாக இருந்தாலும் சரி,
தன் பொறுப்பு, தன் பதவி, தனக்கான வேலை, நிறுவனத்திற்கான செயல்பாடுகள், வாங்குகிற சம்பளம், இவற்றையெல்லாம் கடந்து எங்க முதலாளி எங்க ஓனர் என்ற அபரிமித நம்பிக்கையோடு உள்ள விசுவாசம் பெரும்பாலும் பலரிடத்தில் உண்டு.

வேலை செய்பவர்கள் இப்படி விசுவாச வீரர்களாக இருந்தாலும் முதலாளிகளின் கண்ணோட்டத்தில் எல்லோருமே வேலையாட்கள் தான்.  இதில் பதவி சம்பள வேறுபாடுகள் எல்லாம் கடந்து வேலையாட்கள் என்பவர்கள் வேலையாட்கள் தான்.

அரிதாக சில முதலாளிகள் ஒரு சில நன்மைகளை தொடர்ந்து தங்கள் வேலையாட்களுக்கு செய்து வருவதும் இங்கு மறக்க முடியாத ஒன்று தான் மறுக்க முடியாத ஒன்றுதான்.

மற்றபடி, 
ஒருவரை வேலைக்கு அமர்த்துகிறோம் என்றால் அவருக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு அவரை எப்படி வேலை வாங்கலாம் என்ன சொல்லி வேலை வாங்கலாம் பாராட்டி வேலை வாங்குவது அல்லது முகஸ்துதி பாடி வேலை வாங்குவது அல்லது அரிதாக சிலர் நேர்மையாக அவர்களை மதிப்பீடு செய்து வேலை வாங்குவது என்று முதலாளிகள் தங்கள் முதலாளிகளின் நுணுக்கங்களை சரியாகவே செய்து வருகிறார்கள்.

நான் இதற்கு முன்பாக பணி செய்யும் நிறுவனத்திலும் எங்களுக்கு எஜமான விசுவாசம் மிக அதிகமாக இருந்தது. அவரது நல்ல நடவடிக்கைகள் ஊழியர்களோடு இயல்பாக பழகுவது நம்மை போல் ஒருவராக இருந்து முதலாளியாக உயர்ந்தது என்று நல்ல மதிப்பெண்கள் அவர் மீது இருந்ததால் அந்த விசுவாசம் எங்களுக்குள் பெருகிற்று.

ஆனால் அவரது சில தவறான செயல்பாடுகளால் தனது தனிப்பட்ட சில தவறான முடிவுகளால் கம்பெனி நிலைகுலைந்து எங்களது சம்பளங்கள் எல்லாம் தராமல் இழுத்தடிப்பு செய்யும் பொழுது நாம் கம்பெனிக்கு அதன் வளர்ச்சிக்கு இவ்வளவு விசுவாச வீரர்களாக இருந்தாலும் அவரது பிரச்சினைகளை எல்லாம் பகுதி பகுதியாக பிரித்து நம் தலையில் சுமத்திவிட்டார், நம் சம்பளத்தை அபகரித்து வைத்துள்ளார் என்று ஆதங்கமும் கோபமும் பலருக்கு இன்னும் உண்டு. தொடர்கதை ஆகி விட்டது பலருக்கு. பலர் வேறு வேறு வேலைகளுக்கு சென்று இதையெல்லாம் மறந்தே விட்டார்கள்.
அது ஒரு பக்கம் இருக்கட்டும்.!


சிலர் எஜமான விசுவாசம் மேலோங்கி தனக்கு கீழ் செய்யும் பணியாள்களுக்கு ஊதிய உயர்வுக்கு கூட பரிந்துரை செய்ய மாட்டார்கள் கம்பெனிக்கு மிச்சம் பிடித்து தருகிறோம் என்ற பேர்வழிகளாக. இவங்களுக்கெல்லாம் எதுக்குங்க இவ்வளவு சம்பளம் உயர்வு இதுவே போதும் என்று அந்த பரிந்துரை பட்டியலிலும் கை வைத்து விடுவார்கள்.!


முன்னொரு நாளில்....

எனது சம்பள பிரச்சனைகளை எனது சீனியர் நண்பரிடம் கூறி பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் ஒரு முறை இவ்வாறு கூறினார்.....

அவர் ஆரம்ப நாட்களில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணி செய்யும் பொழுது அவருக்கு சம்பளம் தாமதமாக வந்தது அதுவும் ஒரு மாத தாமதம் தான்.

வாராவாரம் வேலை ஆட்களுக்கு வார சம்பளம் கொடுக்கும் பொறுப்பும் இவருடையது தான். எல்லோருக்கும் வாராவாரம் சரியாக பணத்தை கம்பெனி சொல்வது போல கொடுத்து விடுகிறோம், ஆனால் நம் சம்பளம் ஒரு மாதம் தாமதம் ஆகிறது என்று வருந்தியவர் திடீரென யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்தார்.

ஆம் அடுத்த வாரம் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது தனக்கான சம்பளத்தை அதிலிருந்து எடுத்துக்கொண்டு வவுச்சர் போட்டு ஓனருக்கு அனுப்பி விட்டார்.

இது சற்றும் எதிர்பார்க்காத நிர்வாகம் தூக்கி வாரி போட்டது போல அய்யய்யோ இது என்ன இப்படி செய்துவிட்டார் இது பலருக்கு முன் உதாரணமாக ஆகிவிட்டால் என்ன செய்வது என்று அம்மாத்ததிலிருந்து காலாகாலத்திற்கு சம்பளத்தை சரியாக போட்டார்களாம்.

விஷயம் என்னவென்றால்...

நிறுவனம் என்பது நிறுவனம். உங்கள் வேலை என்பது உங்கள் வேலை. உங்களுக்கான சம்பளம் என்பது உங்களுக்கான சம்பளம். எஜமான் என்பவர் எஜமான் தான்..! 

இது எல்லாம் தாண்டி எனக்கு படி அளக்கிறவர் என்று ஆண்டான் அடிமை முறைக்குள் போய் விடுவது தான் அதீத விசுவாசத்தினால் ஏற்படும் பிழை.

இந்த காலத்தில் வேலை கிடைப்பது குதிரை கொம்பாகத்தான் இருக்கிறது. 
அதிலும் நல்ல நிறுவனங்களில் வேலை கிடைப்பது என்பது அரிது இதுதான். 

ஆனால் நாம் எந்த வேலை செய்தாலும் அது நமக்கான வேலை அதற்கான சம்பளம் இது எல்லாம் கடந்த எஜமான விசுவாசம் எனும் உறவு தேவையற்றது. 

நம்மால் ஒரு நிறுவனத்தை மாற்றிக் கொள்வது எந்த அளவிற்கு கடினமாக இருக்கிறதோ அதுபோல கம்பெனி முதலாளிகள் தங்களது வேலையாட்களை மாற்றிக் கொள்வது அவ்வளவு கடினமில்லை ஒரே நாளில் மாற்றிவிட அவர்களால் முடியும் என்பதையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். என்னதான் மாங்கு மாங்கு என்று விழுந்து விழுந்து வேலை பார்த்தாலும் 99% முதலாளிகளுக்கு எல்லோருமே கூலி ஆட்கள் தான். அவர்களை வைத்து தங்களை தங்கள் நிறுவனத்தை எப்படி உயர்த்திக் கொள்ளலாம் என்று தான் கருதுவார்கள், சிந்திப்பார்கள். ஏனென்றால் அதுதான் அவர்கள் பிரதான பணி.! அதனால்தான் அவர்கள் முதலாளி.!!

அதைத் தாண்டி நான் கம்பெனியை உயர்த்துகிறேன் என்று நாம் எடுக்கும் முயற்சிகளை விட இன்னொரு விசுவாச வீரர் அங்கு நுழைந்தார் என்றால் நம்மை புறந்தள்ளிவிட்டு அவரை வைத்து வண்டியை ஓட்ட ஆரம்பித்து விடுவார்கள் என்பதையும் எண்ணித் பார்த்தல் நலம்.!

கில்லிக்கு கில்லி டில்லியிலும் உண்டு.! 

நாம் பார்க்கும் வேலைக்கு உண்மையாக நேர்மையாக கருத்தாக நம் திருப்தியோடு வேலை பார்ப்பது நல்லது.
அந்த அறம் உங்கள் வாழ்க்கைக்கும் பயனுள்ளதா அமையும் உங்களையும் ஒரு நல்ல முதலாளியாக உயர்த்தவும் கூடும்.!
அன்று தொழிலாளிகளை சரியாக நடத்தினாலே உங்களது வாழ்வின் வெற்றி வசப்படும்.!!


அன்புடன்
🌸 பூங்குன்றன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...