முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மறந்துபோன போபால் நினைவுகள்.. – ஒரு சாமானியனின் குரல்..



    எனக்கு அப்பொழுது இரண்டு வயது. விவரம் அறியா வயதில் நான் வீட்டினுள் உறங்கிப்போன  அதே நேரத்தில் என் தேசத்தின் மற்றுமொரு பகுதியில் எனக்கொத்த வயதுடைய எனது சகோதர சகோதரரிகள் விசவாயு கசிந்து இறந்தவர்களின் எண்ணிக்கையில் அடங்கிப்போனது அப்பொழுது எனக்கு தெரியாது.

பல ஆண்டுகளாக போபால் விசவாயு பற்றி பேசிவருவதை நான் விவரம் அறியும் வயதுகளில் துவங்கி தற்காலம் வரை கேட்க முடிகிறது. கேட்க மட்டும்தான் முடிகிறது. இன்று அதைப்பற்றி நானே இங்கு மனதில் உள்ளவற்றை பகிர்வேன் என்பது நேற்றுவரை நானறியேன்.

வாகனங்களுக்கு பிரேக் எதற்கு என்று கேட்கையில் பலரின் பதில் வாகனத்தை நிறுத்துவதற்கு என்பதாக இருக்கும். ஒருசிலர் அது பாதுகாப்பிற்கு என்பார்கள். வெகுசிலர் வாகனத்தை வேகமாக இயக்கவேண்டுமெனில் பிரேக் அவசியம் என்பார்கள். இதுவும் சரிதானே.

அறிவியல் வளர்ச்சியும் அப்படி பல்வேறுபட்ட கருத்து வளங்களைக் கொண்டதுதான். அதில் ஒன்றாக வந்ததுதானே அந்த பூச்சுகொல்லி தொழிற்சாலை. அந்த தொழிற்சாலையில் பணியில் இருந்தவர்களுக்கு சிறப்பான எதிகாலம் நமக்குண்டு என்ற எண்ணம் இருந்திருக்கும். அழியாநிலை பஞ்சுமில்லில் பணிபுரிந்தவர்கள் போல. இரண்டுமே மூடப்பட்டது , கனவுகளும் தகர்ந்தது. ஆனால் இரண்டிற்குமான வரலாறுகள் வேறு.

ஒரு சாதாரண விடயமாக போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையை மூடிவிடவில்லை. வளர்ச்சி என்பது எப்பொழுதும் தேசத்தின் கஜானாவை நிரப்புவது என்ற குறிக்கோளுடன் இருப்பின் அது நிச்சயமாக மக்களுக்கு பாதிப்பில் வந்தே தீரும் போலும். அதில் மக்களின் பாதுகாப்பு என்பது வெறும் காகிதங்களில் மட்டுமே ஆவணமாக பல்லிளிக்கும்.

ஒரு பேனாவுக்கு கூடவே மூடி (Cap) அதை பயன்படுத்துபவரின் பாதுகப்பிற்காக தரப்படுகிறது. வாகனத்தில் பிரேக், சீட் பெல்ட் போன்றவையும் , விமானங்களில் பாரசூட் போன்றவையும் அப்படிப்பட்டதுதான்.

ஆனால் இன்றளவும் பல தொழிற்சாலைகள் மக்களுக்கு பாதிப்பிலாமல் இயங்குகிறதா என்பது அரசுக்கே வெளிச்சம். தூத்துக்குடியில் கூட 13 பேர் உயிர் அழிக்கப்பட்டதுதானே மிச்சம்.


போபால்.   1984 December 2. இரவு

விசவாயுவான மெத்தில் ஐசோசயனேட்டு (Methyl isocyanate C2H3NO ), வெறும் 40 நிமிட கசிவு 40 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாக பரவியதை எண்ணிப்பார்க்க இன்றளவும் ஐயமாக உள்ளது. சர சரவென அது வீழ்த்திய உயிர்களின் எண்ணிக்கை 15000க்கும் மேல். பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே லட்சக்கணக்கில். பேரிழப்பு அது. மீளாத்துயர் அது.

விபத்தின் பின்பு இதன் உரிமையாளர் வாரன் ஆண்டர்சன் போபால் போலீஸால் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு , பின் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், இந்தியாவிலிருந்து வெளியேறினார். வெளியேறினார் என்ற பதம் கூட தவறு. அனுப்பி வைக்கப்பட்டார் என்பதே உண்மை. பின்பு அவர் இந்தியா வரவே இல்லை. விபத்து நடந்து 30 வருடம் கழித்து செப்டம்பர் 2014 லில் அவர் இறந்து போனார். மக்களுக்கான நீதியும் புதைந்து போயிற்று, அது தான் நம் தேசத்தின் வழக்குகளின் வழக்கமோ?

2006இல் அரசு வெளியிட்ட தகவல்படி, 5,58,125 பேர் நச்சுவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டனர்
அவர்களுள்  3,900 பேர் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர். உள்ளுறுப்புக்கள் பாதிப்புகள், அதில் இருந்து மீள வசதியின்றி மாளும் மக்கள் இந்திய குடிமக்கள்தனே.?

இன்றுவரை அதின் காயம் ஆறாத நெஞ்சத்தோடு இழப்பீடு கிடைக்காமல் துவண்டு நிற்கும் மக்களை காண முடியும் என்பதே கொடுமைதானே.?

இன்று போபால் சென்றாலும் ஒருவேளை அந்த நச்சுக்காற்று நம் நாசியில் அதின் பயங்கரத்தை உணர்த்தக்கூடும். அவ்வளவு ஏன், அந்த பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்க உச்ச நீதிமன்றம் 2012ம் ஆண்டுதான் அரசுக்கு உத்தரவு கொடுக்கிறது. அதுவரை 28 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் எப்படிப்பட்ட நீரை குடித்திருப்பார்கள் என்பதை நினைக்கையில் நெஞ்சம் உறைகிறது.


ஜப்பானில் அணுஉலை விபத்தின்போது அப்பகுதியில் வசித்த 45,000-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். 1986-ல் ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மிக மோசமான அணு உலை விபத்து இது. இந்த விபத்தில் மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகள் தாவரங்களும் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டன. இந்த விபத்துக்குப் பிறகு, புகுஷிமா சுற்றுவட்டாரத்தில்) ஜப்பானில் பரவலாகக்காணப்படும் பேல் கிராஸ் ப்ளூவகை வண்ணத்துப்பூச்சிகளின் அளவு குறைந்ததுடன் அவற்றின் இறப்பு விகிதமும் அதிகரித்திருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.


சற்று நம் பகுதிக்கு வருவோம். 

ஜனவரி 2017இல் எண்ணூர் துறைமுகம அருகே இரு கப்பல்கள் மோதிய விபத்தால்(!),  அறுபத்தைந்து டன் அளவு கச்சா எண்ணை கசிவு கடலில் கலந்தது. வாரக்கணக்கில் வாளி கொண்டு அள்ளிய அரசு கூடங்குளம் அணு உலை போன்றவைகள் ஆபத்து அல்ல என ஊளையிட்டால் எப்படி நம்புவது.?

சாமானிய மக்களின் உயிர் அவர்களை அறியாமல் யாருக்காக எப்போதும் பலியாகிறது. ஏன் அவர்களுக்கான நீதி கிடைக்குங்காலம் மட்டும் யுகம் யுகமாக நீளுகிறது.

வேலைவாய்ப்பு தருகிறோம் என அரசு இந்தியாவின் கதவுகளை அந்நியர்களுக்கு திறந்து விடுவது தற்காலத்தில் மிக அதிகம். .தொழிற்சாலைகளின் அவசியம் பற்றி பேசும் அரசு அதற்கான அடுத்த பக்கத்தையும் பார்க்க மறுப்பது இது போன்ற ஆபத்துக்களை சாமானிய மக்கள் தலையில் அவர்களை அறியாது அதின் பாரத்தை சுமத்துவதற்கு ஒப்பாகும்.

ஒரே ஒரு பூச்சுகொல்லி தொழிற்சாலையின் விபத்திர்க்கான தீர்வு ஒரு தலைமுறை கடந்தும் எட்டாத நிலையில், இங்கு நம்மைசுற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம், தூத்துக்குடி ஸ்டெர்லைட், தேனி நியூட்ரினோ,  நெடுவாசல் ஹைட்ரோ கார்பன், டெல்டா விவசாய நிலப்பரப்புகளில் பரவும் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் போன்றவைக்காக நாம் நமக்கான, நம் சந்ததிக்கான பாதுகாப்பை தியாகம் செய்ய வேண்டுமோ என தோன்றும் எண்ணங்களை அரசு பரிசீலிக்குமா.. கண்டுகொள்ளுமா.. காணாது கொல்லுமா..?


பாதுகாப்பு என்பது ஏதும் மிச்சம் மீதி இருக்குமோ.. அல்லது கேள்வியே கேட்க யாரும் இருக்க கூடாதவாறு மொத்தமாய் துடைத்துப்போகுமோ..?

 கண்ணெதிரே நடந்த நிகழ்வுகளுக்கே நீதியில்லை எனும்போது நம் கழுத்துவரை சுற்றியுள்ள இவைகளெல்லாம் ஒட்டுமொத்தமாக நம்மை விழுங்கியே விடுமோ எனும் ஐயம் எழுகிறது.



தீர்வுகள்தான் என்ன.?

நாட்டின் வளர்ச்சி என்பதன் உண்மை அருஞ்சொற்பொருள் என்ன.. மக்களின் வளர்ச்சிதானே அல்லாமல் கஜானாவில் கல்லா கட்டுவதா ? இதற்கு பொருள் உணராவரை தீர்வுகள் பற்றி பேசி பயன் இல்லை. போபால்கள் தொடர்ந்தாலும் வியப்பில்லை.!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...