‘நீ என்னதான் சொல்லு.. நாம நம்ம இடத்துல இருக்கதுதான்
சுதந்திரம், இப்டி நாலு சுவத்துக்குள்ள சுத்திகிட்டு இருக்குறது, ரெண்டு வேளை
சாப்பாடு.. யப்பா இது என்ன வாழ்க்கை’
‘ம்ம்.. உனக்கென்ன.. நல்லா பேசுவ.. எங்கயோ
இருந்த நம்மள கூட்டியாந்து, வீட்டுல நமக்குன்னு தனி இடம் குடுத்து, சாப்பாடு
கொடுத்து காப்பத்துறாங்க பாரு.. நீ இதுவும் பேசுவ.. இன்னமும் பேசுவ..’
‘அடேங்கப்பா.. நீ ஓவராதான் இந்த
வீட்டுகாரங்களுக்கு ஜால்ரா அடிக்குற, உனக்கு உண்மையில் சுதந்திரமா வாழ மனசே
இல்லையா’
‘மனசு என்னவோ இருக்குதான். ஆனா எல்லாம் நாம
நெனச்சா நடக்குதா.. நம்மள பார்த்தா அவங்களுக்கு மனசு ரிலாக்ஸ் ஆகுமாம். நம்ம மனசு
அவங்களுக்கு புரியுமா என்ன.? நாம யாரால கட்டுப்படுத்தப்படுறோம், நாம நினச்சா நினச்ச
இடத்துக்கு போய்டத்தான் முடியுமா? எல்லாம் நம்ம பிறவியால் வந்தது.. கொஞ்சம் கலரா,
அழகா இருந்ததால வந்த வினை’
‘அட ஆமாப்பே. என்ன அழகா இருந்து என்ன புண்ணியம்..
வீட்டில் உள்ளவங்க, அப்புறம் இங்க வர்றவங்க போறவங்க எல்லோருக்கும் காட்சிப்பொருளா
நம்ம வாழ்க்கை ஆகிட்டு. நாம நெனச்சாலும் மாத்த முடியல’
‘அதாம்பா வருத்தமா இருக்கு, இருக்க துக்கம்
பத்தாதுன்னு போன வாரம் ஒருத்தனை கொண்டுவந்து இங்க போட்டாங்க. என்ன நினைச்சானோ
தெரியல, இந்த கண்ணாடி சுவருல அடிக்கடி முட்டிகிட்டு இரத்தம் சொட்ட சொட்ட செத்து
போய்ட்டான். இந்த வீட்டு ஓனரும் எவ்ளவோ முயற்சி பண்ணுனார்,, ம்ம்ம்ஹூம்.. செத்து
மிதந்ததுனான் மிச்சம், நம்ம மனசு மனுசங்களுக்கா புரியப்போகுது’
மீன் தொட்டி உள்ளே உலாவியபடி பேசிக்கொண்டிருந்த
இரண்டு மீன்களும் தன்னை நோக்கி விரைந்து வர... நிறைமதி சட்டென விழித்தாள்..!
‘ஓ.. கனவா..’ என உணர்ந்தவள், சட்டென மீன்தொட்டி
பக்கம் திரும்பினாள். ஜாம் ஜாம் என இரண்டு மீன்கள் நீந்திக்கொண்டு இருந்தன. அதென்ன
அப்படி ஒரு கனவு. மனதில் நினைத்துக்கொண்டே மீன்தொட்டி அருகில் சென்றாள் நிறைமதி.
தேமே என உலாவிக்கொண்டு இருந்தன அவைகள்..
புதிதாக திருமணம் ஆன நிறைமதிக்கு அவள் கணவன்
பிரபா தந்த அன்பு பரிசு அந்த மீன் தொட்டியும் இரண்டு மீன்களும். இன்னும் சிறந்த
விலை உயர்ந்த மீன்களை பின்னர் வாங்கி தருவதாக சொல்லியிருந்தான் பிரபா. இப்படி
இருக்க என்ன அப்படி ஒரு கனவு என நொந்துகொண்டாள்.
நம்ம பார்த்து சந்தோசப்படனும் என்பதற்காக எங்கோ
உலாவ வேண்டிய மீன்களை இப்படி இரண்டு கனஅடி கண்ணாடிக்குள் அடைத்து வைப்பது சரியா என
யோசிக்கையில் பின்னல் இருந்து திடீரென ஏதோ உரச, வெடுக்கென திரும்பினாள்..
அது ப்ரௌனி. பிரபா இவளுக்குத் தந்த மற்றொரு
அன்பு பரிசு. ஜெர்மனியின் இறக்குமதி பாக்சர் நாய். அவளை உரசிய ப்ரௌனியும் அட்டேன்சனில்
நின்று மீன்தொட்டியில் நீந்தும் மீன்களை கண்டது. மீன்கள் அதை பார்த்து கேலியாக
சிரிப்பது போன்று இருந்தது நிறைமதிக்கு.
அவள் புருவத்தை சுருக்கியவாறு மீன்களை
கவனித்தாள். அவள் கண்ட கனவு காட்சிகள் பட படவென லூஸ் கனெக்சனில் விட்டு விட்டு
எரியும் பல்பு போல வந்து வந்து சென்றது. இடையில் ஒரு பிரேமில் ப்ரௌனியும் வர
சட்டென நினைவை பின்னோக்கி கனவுகளுக்கு மத்தியில் செலுத்தினாள்.
‘இல்லையே.. கனவில் மீன்கள் இந்த ப்ரௌனி
பத்தியும் ஏதோ பேசியதே..’ என கண்களை மூடி யோசிக்க விடுபட்ட கனவு கட்சிகளை
நினைபடுத்தினாள்...
‘இந்த வீட்டுக்காரங்கள புரிஞ்சிக்கவே முடியலப்பே,
எங்கயோ இருந்த நம்மள தூக்கிட்டுவந்து இங்க அடச்சி போட்டு சாப்பாடு போடுறாங்க.
ஞாயிற்றுக்கிழமை பார்த்தா நம்மளவிட பெருசான மீனை வாங்கிட்டு வந்து வெட்டி மசாலா தடவி
லபக்குறாங்க. ஐ ஆம் சோ கன்பியூஸ்டு’
‘அடே.. அங்கபாரு அந்த ப்ரௌனி பயல. ஜெர்மனி
வகயராவாம். போட்ட பெடிகிரிய கூட அப்பப்ப சாப்பிட மனசில்லாம கெடப்பான். நம்ம நிலைமை
கூட பரவாயில்லை. இஷ்டம்போல யூரின் போய்டலாம். நெனச்சப்ப ஆய் போய்டலாம். ஆனா அவனை இந்த
வீட்டுக்காரங்க என்னமோ அலாரம் வச்சமாதிரி ஆய் போக காலையில் ஒருதடவை, சாயந்திரம் ஒருதடவைன்னு
கூட்டிட்டு போவாங்க.’
‘ஆமாப்பே.. இயற்கை உபாதை கூட அவன் நினைச்சபடி
போக முடியாதுல்ல, அவன் நல்ல காவல்காரன்.. ஆனா நெலமைய பாத்தியா?’
நிறைமதிக்கு என்னவோ உறுத்தலாக இருந்தது. என்ன
இது. கனவில் என்னென்னமோ வருது என நினைத்தவள் ப்ரௌனியை கவனித்தாள். இப்போ மணி
மதியம் மூணு. ஒருவேளை இப்போ ப்ரௌனியை வெளியே கூட்டிக்கொண்டு போனா என்ன செய்யும் என
நினைத்து, சற்றும் தாமதிக்காமல் ப்ரௌனியை அதின் சங்கிலியுடன் அழைத்து அப்பார்ட்மெண்ட்
முதல் தளத்தில் இருந்து கீழே இறங்கினாள்.
சர சர என கூடவே இறங்கிய ப்ரௌனி வழக்கமான இடத்தை தெரிவு
செய்து சிறுநீர் கழித்தது.
அந்த நிகழ்வு அவளுக்கு மிகுந்த மனவேதனை தந்தது. ‘ச்சே,
இதோடு சரி. இனி இப்டி பண்ணிட கூடாது. அடிக்கடி ப்ரௌனியை வெளியில் அழைச்சிட்டு
போகணும். கூடவே இனி எந்த மீனும் தொட்டிக்கு வாங்க வேண்டாம். அது அது அதின்
இடங்களிலே இருக்கட்டும், பிரபாவிடமும் சொல்லிடனும் என நினைத்துகொண்டு வீட்டின்
உள்ளே வந்து அமர்ந்தாள்.
மாலை பிரபா வீட்னுள் நுழைந்தான்.
‘சர்பிரைஸ்’ என்றவன் தன் கையை தூக்கி
காண்பித்தான். வெள்ளை பாலித்தின் பையில் மஞ்சளும் ஊதாவுமாக இரண்டு மீன்கள் மிரண்ட
வண்ணம் சுற்றி வலம் வந்துகொண்டிருந்தன.
‘ஹாப்பி நியூ இயர்ர்ர்ர்ர்ர்... உனக்காக நியூ
இயர் 2019 க்கு கிப்ட்.. எப்டி இருக்கு’
என்றான்.
அவள் செய்வதறியாது எழுந்து நின்று எச்சில்
விழுங்கியபடி அவனருகே வந்தாள்..
அவள் காதுகளில் மீன்கள் கனவில் பேசிக்கொண்ட
சப்தம் ஒலித்தது..
‘ஆனா எல்லாம் நாம நெனச்சா நடக்குதா.. நாம யாரால
கட்டுப்படுத்தப்படுறோம், நாம நினச்சா நினச்ச இடத்துக்கு போய்டத்தான் முடியுமா?’
-முற்றும்-
பூங்குன்றன்



கருத்துகள்
கருத்துரையிடுக