முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரவு உலா.!



-சிறு(பேய்?)கதை-


‘அண்ணே, நல்லா இருட்டிடுச்சி, வெரசா போய்ச்செரனும்’

‘ஆமாடே, நடுவால உள்ள சுடுகாட்ட தாண்டி போயிட்டோம்னா சரி. எழவு, ஊருக்கு போற ரோட்டுலையா சுடுகாட வைப்பானுக, நம்ம ஊரு கிழடுகளுக்கு புத்தி மங்கி கெடந்திருக்கும் போல’

‘ராத்திரி நேரத்துல எழவு அது இதுன்னு அவச்சொல்லா சொல்லுற, இன்னும் சுடுகாட்ட நாம நெருங்கவே இல்ல, நீவேற,  வாயில ‘அபா அபா’ன்னு போட்டுக்கண்ணே’

‘என்னடா பச்சப்புள்ளகிட்ட சொல்ற மாதிரி இருக்கு, பயம் இல்லாம வாடே’ என்றவனுக்கும் உள்ளூர நடுக்கம் வெகுவாக இருந்தது.
....


பின்ன, ‘சாக்கையன்கொள்ளை சுடுகாடுன்னா சும்மாவா’ன்னு ஊரு பெருசுக பேய், ஆவி கதைகளை ஆரம்பிச்சா பலபேருக்கு பீதியில பேதி ஓடிடுமாக்கும்.


சுத்துப்பட்டு கிராமம் எல்லாம் சாக்கையன்கொள்ளை சுடுகாடுன்னா ஏதோ ‘ஜமீன் கோட்டை’ பட எபெக்டுக்கு நடுங்குவாங்க. எவ்ளோ பெரிய மோடிமஸ்த்தானா இருந்தாலும் சாக்கையன்கொள்ளை எனும்போதே சகஜ நிலை விட்டோடும். அந்த மாவட்டம் முழுவதும் ஆவி, பேய் விசயத்துக்கு இந்த பெயர் மிக பிரபலம்.


இருவரும் மாட்டு சந்தைக்கு போய்விட்டு, இரவு சினிமா சென்றதால், கடைசி பேருந்தை தவற விட்டதால் இன்று வினையானது.

.............



‘அண்ணே, போன மாசம் எங்க பெரியப்பா இப்டித்தான் சாக்கையன்கொள்ளை சுடுகாடு வர்ற வழியில...........’

‘கொன்னுபுடுவேண்டா.. இப்டி எதையாவது ஆரம்பிச்சி இருக்கவனையும் நடுங்க வைக்குறதே உன்னமாதிரி ஆளுக்கு பொழப்பா போச்சு’ என்று வேகமாய் நடைகட்டினான்.

‘அண்ணே, இரு , இப்டி வேகமா நடக்காத, என்னால முடியல. உன்கூட வரணும்னா ஓடிதான் வரணும்போல’ என்றவன் பின்னாடி அடிக்கடி பீதியில் பார்த்துக்கொண்டே வேகமெடுத்தான்.


இருவருக்கும் வெகுவாக மூச்சு வாங்கியது.


‘எடே, கொஞ்சம் நின்னுட்டு போவோமா’

‘அண்ணே’ என்று சற்று அதிர்ந்து அலறியவன், ‘புத்தி கேட்டு போச்சா, சுத்தி முச்சூடும் எழவு கரி இருட்டா கெடக்கு, ஏதோ மண்ணு ரோடுதான் கண்ணுல வெள்ளையா தெரியுரதால பொத்தாம் பொதுவா போய்கிட்டு இருக்கோம், நீ என்னன்னா ஏதோ சொந்தக்காரன் வீட்டுக்கு வந்தமாதிரி தங்கிட்டு போகலாம்னு ஆசுவாசப்படுற,  நிக்காம போய்டுவோம்னே’ என்று கரைந்தான்.


‘என்னடே, இன்னைக்கு ஓவரா இருட்டா கெடக்கு,’ இந்த ரோட்டையும் போட மாட்டனுங்க, லைட்டும் நமக்கு வராது போல, தேர்தல் வருதாம், ஓட்டு கேட்க வருவாகல்ல..  பயபுள்ளைக டவுசருக்கு தீய வச்சிபுடுறேன், சரிப்படுமுங்கேன்’ என பயத்தை போக்க பேச்சை மாத்தினான்.


‘ஆமாண்ணே’ என்று ‘களுக்’ என சிரித்தான்.

.................


ஒரு நிசப்தமான பத்து நிமிட வேக வேக நடைக்கு பின்பாக சாக்கையன்கொள்ளை சுடுகாடு கண்ணுக்கெட்டும் தூரத்தில் நெருங்கினார்கள்.

சாக்கையன்கொள்ளை சுடுகாடு இருப்பிடம் ஒரு நாற்சந்தி. இதுபோன்ற நடுநிசி வேலைகளில் எப்போதாவது சில லாரிகள் போகும். அந்த ஒளிதான் இதுபோன்ற நேரத்தில் மனதில் ஒரு தைரியம் தரும். அனால் இன்றோ, ஒரு விட்டில் பூச்சி ஒளி கூட இல்லாதது இருவருக்கும் நெஞ்சடைத்தது.


அதோ, இந்த இருட்டிலும் சாக்கையன்கொள்ளை சுடுகாடு சுற்றுச்சுவர் தெளிவாய் கண்ணில் பட்டது.

‘எண்டே, காலுக்குள்ள நடக்க, தள்ளி வாடே என்று கடுகடுத்தான்.


‘நெருங்கிட்டோம்னே, எனக்கு ஒரு மாதிரி இருக்கு, உன் பக்கத்துலையே நா நடந்துவந்தா உனக்கு என்னவாம், சின்னபய எனக்கு நீதானே தொண’ என்றான் மெல்லமாய்.


‘அடேய், கால மிதிக்காதடே, இருட்டுல விழுந்தா எங்க கேடக்கொம்னு தடவித்தான் கண்டுபிடிக்கணும் போல’


‘ட்றேஏஏஏஏச்ச்சி...... ட்றேஏஏஏஏச்ச்சி....’


‘அய்யய்யோ அண்ணே, அந்த சத்தத்த கேட்டியா?’ அவனின் கரம் இருக பற்றியவாறு என்று அலறினான்.


வழிந்த வியர்வையை அசட்டை செய்தவாறே ‘இருடே, இருடே, பயப்படாமா நில்லு, எசகு பிசகா ஏதாச்ச்சும் பண்ணிடாத’ என்று பிதற்றினான் பயத்திலேயே.


. ‘ட்றேஏஏஏஏச்ச்சி...... ட்றேஏஏஏஏச்ச்சி....’


கண்டிப்பாக சத்தம் வரும் திசை தங்களுக்கு பின்னல் இருந்துதான்.. ஆனால் தூரத்தில்.


‘ஐயோ, கண்ணெல்லாம் இருட்டுதுண்ணே, அண்ணே வாண்ணே ஓடிடுவோம்னே’ இழுத்தான்.


‘கெரகம் பிடிச்சவனே, என்னன்னு தெரியல, சத்தம் போடாம நில்லு, பேயின்னா ஓடிடலாம் அது பேசாம போயிடுமாம், ஒரு வேளை அது பிசாசுன்னா பொடனில அடிச்சு சாகடிச்சிடும், அதுவே இரத்தகாட்டேரின்னா கொரவலய கடிச்ச்சிஈ...’


‘வேணாம்னே சொல்லாத, எனக்கு ஒன்னுக்கு வந்திடும் போலிருக்கு’
மனதை தைரியப்படுத்திக்கொண்டு பின்னாடி திரும்பி பார்த்தான்.


. ‘ட்றேஏஏஏஏச்ச்சி...... ட்றேஏஏஏஏச்ச்சி....’ வெள்ளை நிறத்தில் ஒரு பர்லாங்குக்கும் குறைவான தூரத்தில் அது தங்களை நோக்கி சீரான வேகத்தில் மிதந்து வந்தது.

. ‘ட்றேஏஏஏஏச்ச்சி...... ட்றேஏஏஏஏச்ச்சி....’

‘கொப்பம்மவனே, ஓடியாடா ஓடியா என்றவன் தலைதெறிக்க நாற்சந்தி நோக்கி ஓடினான்.
‘அய்யய்யோ அண்ணே, கைவிட்டுட்டியே, விட்டுட்டு ஓடிராத’ என்றவன் தலைதெறிக்க பின் தொடர்ந்து, பின்னங்கால் பொடனியில் அடிக்க ஓடினான்.


. ‘ட்றேஏஏஏஏச்ச்சி...... ட்றேஏஏஏஏச்ச்சி....’ சத்தம் மிக அருகில்.


. ‘திரும்பி பாக்காதடே, வெரசா ஏம்பின்னாடி ஓடியா, பக்கத்துல வந்துட்டு போலிருக்கே, அய்யய்யோ இந்த பய சத்தத்தையே காணலையே, ஆத்தா.. உனக்கு போன மாசந்தானே பொங்க வச்சோம், காப்பாத்திடு தாயீஈஈ..........’


‘ட்றேஏஏஏஏச்ச்சி...... ட்றேஏஏஏஏச்ச்சி....’ சத்தம் மிக மிக அருகில்.


‘அய்யய்யோ.. யாப்ப்பே.. பக்கத்துல வந்துட்டு போலிருக்கே, யண்ணே.. நீ உசிரோட தப்பிச்சா ஏ(ன்) ஆத்தாகிட்ட சொல்லிப்புடு, மணிமேகலை அக்காகிட்ட பத்தாயிரம் கொடுத்து வச்சிருக்கேன், அப்புறம்...............’


‘அடேய், வாய மூடிகிட்டு வெரசா ஓடியாடா, எழவு பணமாடா இப்போ முக்கியம்’ ஓடியாடேஏஏஏஏஏ..’


‘ட்றேஏஏஏஏச்ச்சி...... ட்றேஏஏஏஏச்ச்சி....’ டிரிங் டிரிங்...


‘அண்ணே, யாருண்ணே அது..  யே இப்புடி ஓடுறிய’ பரிச்சயப்பட்ட பெண் குரல் கேட்டு சட்டென இருவரும் நிற்க..


‘நான்தான் கண்மணி, என்னத்துக்கு இந்த ஓட்டம் ஓடுறீக’ என்றாள் வெளுத்த ஆடை அணிந்தவளாய்.


(அய்யய்யோ, இந்த புள்ளைய பாத்துதான் இப்புடி ஓடியான்தோமா என எண்ணியவாறே) ‘அடக்கெரகமே, நீயாபுள்ள, என்ன இந்த நேரத்துல சைக்கிள்ள ஒத்தையில வர்ற’ என்றான்.


‘அண்ணே, கவனிச்சியா, சாக்கையன்கொள்ளை சுடுகாடு தாண்டி ரொம்ப தூரம் வந்துட்டோம்னே’ என்றவனை கரம் பற்றி அழுத்தி ‘உன் திருவாய மூடு, பொட்ட புள்ள முன்னாடி அசிகப்படுத்திடாத’ என கிசுகிசுத்தான்.


அவள் இறங்கி சைக்கிளை தள்ளிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.


‘எங்கய்யன் போன மாசம் செத்துபோச்சுல்ல, வருமானம் வேற என்ன இருக்கு, அதான் நான் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன். ஏதோ எங்கய்யன் படிக்க வச்சதால நர்சிங் முடிச்சேன்.  இப்போ டவுனுல உள்ள ஆஸ்பத்திரில நர்ஸ் வேலை கிடைச்சுது. இப்போ ட்யூட்டி முடிஞ்சு வர்றேன். ஆமா நீங்க ஏன் இப்புடி ஓடுரீக’ என்றாள்.


‘அட, ஓடியாடி நடந்தாதான் சீக்கிரம் வீடு போயி சேர முடியும்.. அத விடுப்பா, இப்புடி பொம்புலபுள்ள, ஒத்தையில தனியா வர்ற, பயமில்லாம’


‘ஆமாண்ணே, நம்ம தைரியம் கண்மணிக்கு வருமா என்ன’ என்றவனை ஓங்கி ஒரு குத்து விட்டான், ‘சனியனே.. உன்னாலதான்டா’ என முனகினான்.


‘பயம் எல்லாம் போச்சுண்ணே, சாக்கையன்கொள்ளை சுடுகாடுலதான் எங்க அய்யனையும் பொதச்சோம். அது என் காவலுக்கு நிக்கும் அப்டின்குற தைரியம்தான்’


‘என்னமோப்பா, நீ படிச்ச புள்ள, இப்டியெல்லாம் யோசிக்குற, எங்களுக்கு அந்த நெனப்பு எங்க, சாக்கையன்கொள்ளை சுடுகாட பாத்தாலே ஒரு நடுக்கம்தான். என் பொண்ணு இப்போதான் பத்தாவது படிக்குது. அதையும் நல்லா படிக்க வைக்கணும். உன்னமாதிரி தைரியமா வளர்க்கணும்’

‘ட்றேஏஏஏஏச்ச்சி...... ட்றேஏஏஏஏச்ச்சி....’


முதல்ல உன் சைக்கிள் பெடலுக்கு எண்ணையை போடு. இந்த சத்தம் சகிக்கல.  
மூவரும் ஊர் வந்து சேர்கின்றனர்.


-முற்றும்-

                                                  -பூங்குன்றன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...