முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிளைவிட்ட பனைமரங்கள்


சிறுகதை பகுதி






சென்னை புத்தக கண்காட்சி.

எவ்ளோ கூட்டம்.

‘வாகன நிறுத்தத்தில் டோக்கனுக்கு காசு வாங்கும் அதி தீவிரத்தை வாகன நிறுத்துமிடத்திற்கும் காட்டுங்கப்பா’ என்றவரை சட்டை செய்யாமல் சீட்டை கிழித்து கொடுத்தார்கள்.

‘பொதுநல கருத்து எப்பவும் அசைட்டையாய் போகிறது’ என நொந்து கொண்டு போனவரை நான் அந்த கூட்டத்திலும் கவனிக்கத் தவறவில்லை.

இது எனக்கு முதல் முறை. எங்கு திரும்பினாலும் புத்தக அடுக்குகள் என்னை மலைக்க வைத்தது. சென்னையில் வாசிப்பின் அவசியம் உணர்ந்தவர்கள் இத்தனை லட்சம் மக்களா என வாய் பிளந்தபடியே ஒவ்வொரு புத்தகக் கடைகளாக நீந்தினேன்.
மாபெரும் புத்தகக்கடலுக்குள் பல பவளப்பாறைகளை நீந்தி கடப்பது போல இருந்தது எனக்கு அந்த வண்ண வண்ண எண்ணங்கள் அடங்கிய புத்தகங்களை கடந்து செல்கையில்.


ஏதோ பழைய வண்ணம் என் அருகில் இருப்பதாக என மனம் உணருகையில், சட்டென திரும்பிய என் கண்களுக்கு முழு இரத்தமும் பாய்ந்தது.

அது.. ஆமாம்.. சத்தியமா அது நிறைமதிதான். எந்த தூரிகையாலும் தீட்டப்படாத வண்ணத்தில் அவள் சில புத்தகங்களை புரட்டிக்கொண்டு இருந்தவள், மின்னல் கீற்றாய் என்னை பார்த்துவிட செய்வதறியா நிலையில் எச்சில் விழுங்கினாள்.

சற்று அப்புறம் போக எத்தனித்து அருகில் இருந்தவன் மேல் மோதிவிட்டாள். அவன் சிரித்தவாறே ‘ஏய், பத்துப்பா’ என்றான்.
அவள் சலனமின்றி அவனருகில் நிற்கையில் எனக்கு விளங்கிற்று, இந்த வண்ணத்திற்கான தூரிகை அவன்தான் போலும். அவள் கணவன் என்று.

ஒரு இரண்டு நிமிடமே இருக்கும். அவள் அவனுடன் கரம்கோர்த்து, நான் இருந்த இடம் விட்டு விலகி போனார்கள்.

சில முடிச்சுகளை மனம் தன் இஷ்டத்துக்கு போட்டுவிடும். ஆனால் அது கடும் முடிச்சு அல்ல. உருவாஞ்சுருக்கு என்பார்களே அதுபோல. அதில் ஒரு பகுதி வாழ்க்கையிடம்தான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் அது கட்டவிழ்க்கும்.
வேகம் வேகமாக கல்லூரிக்கு என் நண்பர்களுடன் நடந்து செல்லும் பாதையில் அதே நேரத்தில் எங்களை முந்திசெல்லும் பேருத்தில் சிலையாய் வந்து போகும் அவளை கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து பார்க்கையில் மனசு கல்லூரிக்கு கடந்து சென்றது.




கல்லூரி நாட்களில்,


‘அந்த பொண்ணு பேரு நிறைமதி. மெக்கனிக்கல் குரூப். நீ சிவில். நீ பாக்டரி கட்டுற, அந்த பொண்ணு மெசின் வைக்குது. ரெண்டு பேரும் லைப்ல எங்கேயோ போய்டுவீங்க. என்ன சொல்லுற’ என்றான் தனபதி அவள் பற்றிய குறிப்புகளை உளவுத்துறை வசமிருந்து பெற்றதுபோல.

‘இப்போ என்னடா சொல்லுறீங்க’ என்றேன்.

‘மாப்பு. அவதான் உனக்கு டாப்பு” என்றான் ஒருவன்.

‘அடேய், சகுநிகளா, யாரு என்னன்னே தெரியல, எதோ அப்பப்ப நாம போற ரோட்டில் நம்மள கடந்து போற ஆயிரம் பேர்களில் ஒருத்தி அந்த பொண்ணு, உடனே ஏனடா இப்படி உசுப்பேத்தி விடுறீங்க’

‘கண்ணு, நீ ஆயிரத்தில் ஒருவன்’ என்றவன், நான் நர நர என்று பல்லை கடிப்பதை கண்டு விலகினான்.

Foundation Engineering  கிளாஸ் நடந்துகொண்டு இருந்தது.

‘மாப்பு, நேத்துகூட அந்த பொண்ணு உன்னை பாத்துச்சு’ என கிசுகிசுத்தான்.

‘உனக்கு எப்படி தெரியும்’ என்றேன்.

‘நானும் பார்த்தேன், 1A பஸ்ல அது ஓர சீட்டில் உக்காருவது உனக்காகத்தான் ’ என்று கிசுகிசுத்தான்.

‘அடேய், பிரபல நாரதா, அதுக்கு முன்னாடி ஒரு ஆயாவும் ஓர சீட்டுலதான் உக்காந்து இருந்துச்சு, அதுவும் எனக்ககத்தானா?’ ஆமா, நீ ஏன் அந்த பொண்ண பார்த்த” என்றேன்.

‘அது.. உன்ன பக்குதான்னு பார்த்தேன்’

‘ஏண்டா. சனியனே. ரோட்டுல நடக்கையில் பாதையை பார்த்து நடங்கடா’

‘அடேய், பாதகா..  உன் கண்ணுல மட்டுமே இப்டி ஏன் தெரியுது. என்ஜாய் பண்ணுற கல்லூரி லைப்க்கு செட் ஆகாத கிராக்கிகளை ஏன் சாமி என் கூட கூட்டு சேக்குற’ என புலம்பினான். நான் கண்டுகொள்ளவில்லை.

‘பேசாம கிளாச கவனி. அரியர் இல்லாம அடுத்த லெவலுக்கு போறோம்’ என்றதும், ஏதோ டைனோசரை பார்ப்பதுபோல விநோதமாக தனபதி என்னை பார்த்தான்.


இரண்டு மூன்று புத்தகங்களை அள்ளிக்கொண்டு வாகன நிறுத்தம் அருகே வந்தேன்.
ஒரு இளம் ஜோடி சிலு சிலுவென சிரித்தவாறே கடந்தது, பார்வையை வேறு பக்கம் திருப்பினேன்.
‘ர்ர்ரர்ர்ர்..பூம்ம்ம்..’ என்ற சத்தத்துடன் பைக் ஒட்டிய ஒருவனின் முதுகில் படர்ந்தவாறு ஒரு பெண் முகமூடி அணிந்து பயணித்தனர். ஆங். அது முகமூடி அல்ல, முகம் மூடி.

என் நினைவுகள் சற்று நேரத்திற்கு முன்பு கண்ட நிறைமதி முகத்தை அசை போட்டது.
அது என்ன அப்படி ஒரு பார்வை. ஏற்கனவே பரிச்சயப்பட்டது போல அல்லவா என்னை கண்டு விழி அகன்றாள். ஒரு வேளை தனபதி அன்று சொன்னது போல அவள் என்னைத்தான் கல்லூரி சாலைகளில் தொடர்ந்து பார்த்திருப்பளோ? இந்த தனபதி பயலுக்கு தெரிஞ்சது எனக்கு தெரியாது போய்விட்டது போலிருக்கே.

‘ஹ்ம்ம் .. ஒரு மெல்லிய பெருமூச்சுடன் கடந்தேன்’

கிளைவிட்ட பனைமரம் போல சிலர் வாழ்விலும் அபூர்வமாய் சிலர் கடந்து போகின்றனர். சிலருக்கு மட்டுமே அது விபத்தாகிறது. பலருக்கு அது ஒரு சாதாரண நிகழ்வுதானே.!

விபத்துக்கள்தான் என்றுமே பேசப்படுகின்றன. விளைவைத் தருகின்றன.!

எனக்கு நடந்தது விபத்து அல்ல என்று உணரும் முன் ஏதோ பழைய வண்ணம் என் அருகில் இருப்பதாக என மனம் மீண்டும் உணர்ந்தது.!


-பூங்குன்றன் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...