அகல சாலையின் ஒருபுறம்,
நீண்டிருந்த தெருவின் துவக்கத்தில், யாரோ ஒரு புண்ணியவான் வளர்த்துவிட்டுப்போன ஒரு
புங்கை மரத்து நிழலில் மாயத்துரை மும்முரமாய் வேளையில் இருந்தான்.
ஒரு நீண்ட சாக்கு, அதின்மீது எங்கோ
கிடைத்த பேனரை மடக்கிபோட்டு அதின்மீது பலகைகட்டையை போட்டு அமர்ந்திருந்தான்
மாயத்துரை.. கை லாவகமாய் பின்னல்களை உருவாக்குவதும் பின் முடிசிகளாய்
உருவேற்றுதலும் தொடர்ந்து நடந்தேறியது.
அவனுக்கு முன்பாய் வரிசையாக
சில ஜோடி செருப்புகளும், சில ஜோடியத்தொலைத்த செருப்புகளும் இருந்தன. அது ஒரு சாலையோர
கடை என்று சொல்லமுடியாது. இரண்டு நிமிடங்களில் சுருட்டிவிடும் அளவிலே இருந்த சிறு குடைக்குள்
அடங்கும் கடை போலத்தான் அது..!
‘பிஞ்சிடுச்சு’ என்று தொப்பென
செருப்பை போட்டாள் ஒரு இளம்பெண்.
‘மாயத்துரை இருக்கையைவிட்டு
சற்று முன்பாக சாய்ந்து எக்கியவாறு அந்த செருப்பை எடுத்து அதை துடைத்தான். பின்
அதில் தையலை போட ஆரம்பித்தான். முதலில் சைக்கிள் ஸ்டாண்டில் வரிசையாய் சாய்ந்து
விழுந்த சைக்கிள்களைப்போல தையல் உருவாகி, பின் ஐந்து நிமிடங்களில் முடிசச்சுகளுடன்
இறுதி இலக்கை அடைந்தது.
‘இந்தாங்கம்மா’
‘எவ்வளவு’
‘இருபது ரூபாய்’
‘அநியாயமாய் இல்லை’ என்று முகம்
சுழித்தாள்.
‘இல்லை’ என்றான் சலனமின்றி. தினமும் பலரும்
இப்படி சொல்வதுதானே.
‘எவ்ளோ திமிரான பதிலைப்பாரூ’ என்று
பற்களுக்குள்ளே முனகியபடி இருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள்.
‘பதினைந்து ரூபாய் எடுத்துக்க..’
‘நான் செஞ்ச வேலைக்கு நீங்க விலையை
சொல்றது சரியில்லை’ என்றான் தீர்க்கமாய் பார்வையை மேல்நோக்கி அவள் கண்களை
பார்த்தபடி.
‘பக்கத்து தெருவில் போன முறை
தைத்துவிட்டு பத்து ரூபாய்தான் கொடுத்தேன்’ என்றாள். அவள் சொன்ன பொய்யும், இன்னும்
பணத்தை அவன் வாங்காது இவள் நீட்டிக்கொண்டே இருந்ததும் அவளுக்கே ஒரு மாதிரி
இருந்தது. சுற்றிலும் ஒரு பார்வையை விட்டாள்.
‘நான் தைத்தது இருபது ரூபாய்தான்.
இதைவிட குறைவாக தைக்க எனக்கு தெரியாது.’ என்றவன் அடுத்து ஒரு ஷீவை எடுத்து பாலிஷ்
போட ஆரம்பித்தான்.
‘உன்கிட்ட போய் தைக்க வந்தேன்பாரூ..
என்ன சொல்லணும்.. இந்தா’ என்று இருபதுரூபாயை கொடுத்துவிட்டு சென்றாள்.
மாயத்துரை சலனமின்றி அதை வாங்கி
மடங்கியிருந்த சாக்கின் மடிப்புகளின் இடையே சொருகிவிட்டு பாலிஷ் போதுவதை
தொடர்ந்தான்.
இதெல்லாம் கவனித்துகொண்டிருந்த
கரும்புச்சாறு விற்கும் சிறுவன் மாயத்துரை அருகே வந்தான்.
‘அது என்னண்ணே சனங்களுக்கு பேரம்
பேசாம ஒரு வேலைக்கு பணம் கொடுக்க முடியாது போலிருக்கே..’ என்றான்.
‘அப்படி அல்ல. அவர்களுக்கு மத்த சில மனுசங்க மேல நம்பிக்கை குறைவு’ என்றான்
மாயத்துரை பாலிஷ் போட்டவாறே.
‘அது என்ன.. இப்போ என் கடைக்கு வந்து
கரும்பு சாறு குடிக்குறவங்க இருபது ரூவாய்ன்னு சொன்னதும் பட்டுன்னு எடுத்து சின்னப்பையன்
என்கிட்டே கொடுக்குறது இல்லையா.. பேரம் பேசுறது இல்லையே.’
‘உன் தொழில் அப்படி..’
‘புரியலயேண்ணே ..’
‘உன் தொழிலில் சாதி தெரியாது. என்
தொழிலில் அப்பட்டமாய் தெரியும்’
‘ஓஹோ.. அப்போ அதுக்கும் நம்பிக்கை
இல்லாததுக்கும் என்ன சம்பந்தம்’ என்றான் சிறுவன்.
‘இங்க சில விசயங்கள காலம் காலமாய்
மாற்ற முடியாது கிடந்திருக்கு.. இனிதான் மாறும்’
‘அப்போ, நீங்க வேற வேலை செய்யலாமே..
கரும்பு ஜூஸ் கடை போடுறீங்களா.. என் முதலாளிகிட்ட கேட்கவா’ இதுல சாதி தெரியாதுன்னு
நீங்கதானே சொல்றீங்க.
‘இல்ல.. இனி நான் வேற எந்த தொழிலும்
இந்த ஊருல பண்ணுனாலும் இது மாறாது’
‘எது.. நம்பிக்கையா’ என்றவன் கரும்பு
மெஷினை நோக்கி நகர்ந்தான்.
‘எல்லாமே.. என் மேல ஒரு சாயத்தை ஊத்தி
வச்சிருக்காங்க. அந்த கறை நான் சாகுறவரை போகாது.. ஆனா..’
‘ஆனா... என்ன..... புரியலைண்ணே’
என்றவாறு கரும்பு மெஷினை சுற்ற துடங்கினான். இரண்டு கரும்புகளை நான்காய் மடித்து
உள்ளே சொருகினான்.. அது சாற்றை பிழிந்தெடுத்தவாறு வெளியே வந்தது. சிறுவனின் கைகள்
கரும்பு மெஷினை பார்த்துக்கொள்ள, பார்வையோ மாயத்துரையை பார்த்துகொண்டிருந்தது.
பதிலுக்காய்.
‘என் பிள்ளைகள் காலத்தில் அது மாற வழி
உள்ளது’
சிறுவன் கரும்புச்சாரை வடிகட்டியவாறே
தேமே என்று பார்வையை செலுத்தினான்.
‘என் பிள்ளைங்க படிச்சு நல்லா
சம்பாதிக்கனும். அதுங்க வாழ்க்கைல வசதி பெருகுனா வேற ஊருக்கு போய்டணும். அப்போ
இந்த நிலை மாற வழி இருக்கு.’
‘இந்த ஊரிலே காசு பணமுன்னு வசதியா
இருந்தா மாறாதா’ என்றான் சிறுவன்.
‘நீ உன் சொந்த ஊருல கோடீஸ்வரனா
மாறுனாலும் அந்த கறை போகாது, வேற ஊருக்கு போய்ட்டா அந்த கறை தெரியாது’
‘கறை.. கறைன்னு சொல்ரியேண்ணே.. அந்த
கறை எங்கதான் இருக்கு..?’ என்றான் சிறுவன்
‘இந்த ஊரு மக்களோட மனசுல..’
-பூங்குன்றன்

கருத்துகள்
கருத்துரையிடுக