முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விபத்துப்பகுதி




அதிகாலை 3:50, திருச்சி to சென்னை பரபர சாலை.

எந்த பானமும் அருந்தாமல் இயற்கையின் உச்சகட்ட அறிகுறியாய் உறக்கமெனும் போதை மூளையையும் அதின் உணர்வுகளையும் உறங்கவைக்க படாதபாடு படும் நேரமது.

மாமண்டூர் கடந்து சென்னையை நோக்கி காரை செவ்வனே ஓட்டிக்கொண்டிருந்தான் பிரபா. Force one கார் அது. முன் இருக்கையில் அவனின் அப்பாவும், பின்புற இருக்கையில் அக்கா, அக்காவின் கணவர் அவரின் இரண்டு குழைந்தைகள், அதின் பின்புற இருக்கைகளில் அவனது தங்கையும் அவரது தோழியும் இருக்க, உஸ்ஸ் என கார் பயணித்து இருந்தது.


இரவு நேர பயண களைப்பு தெரிய கூடாது என்பதற்காக வெகுதூரம் செல்லும் லாரிகள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டும் பின்பு வழிவிட்டும் செல்வது சிலநேரம் வழக்கம். அதுஒரு வேடிக்கையான விடயம், ஓட்டுனர்கள் பலருக்கு இந்த அனுபவம் இருக்கும்.

அதை அறிந்தவனாய் பிரபா எப்போதும்போல சரேலென்று சீராக போய்கொண்டு இருந்தான்.


ஒரு சோதனைச்சாவடி கடந்து ஒரு இரண்டு கிலோமீட்டர் தொலைவே இருக்கும். ஒரு பெரிய சாலை வளைவை கடந்துகொண்டிருக்கும் தருணமது. நொடிப்பொழுதில் காரின் முன்சென்ற லாரி பிரேக் போட்டு சட்டென வேகத்தை குறைக்க, அதை சற்றும் எதிர்பாராத பிரபா காரின் பிரேக்கை அழுத்தினான். கிரீச் என்ற ஓலத்துடன் முன்புறம் வேகம் குறைத்த லாரியை நெருங்கிடாத அளவிற்கு காரின் வேகத்தை குறைத்த தருணம், காரின் பின்புறம் வந்த மற்றொரு லாரி காரை மோத, கார் பின்புறம் நைந்தவாறே முன்புறமும் மோதி இரண்டு லாரிகளுக்கு இடையில் சிக்கிய கார் ஒரு ஆட்டோ அளவிற்கு உருமாறிப்போனது.


+++++++++++++++++++++++++++++++

அதிகாலை மணி 4:10

‘சார்.. என்ன இப்டி ஆச்சு..’ என்று காவலர் ஒருவர் அலறியபடி காரை நோக்கி ஓடிவர, பின்புறமாய் வந்த லாரி டிரைவரும் கிளீனரும் திசைதெரியா இருளில் ஓடி மறைந்தனர்.

முன்னால் சென்ற லாரி டிரைவர் இறுக்கமான முகத்துடன் நின்றுகொண்டிருக்க, இரு காவலர்கள் எங்கெங்கோ தகவலை சொல்லி பரபரத்தனர்.

‘ஆளுகளுக்கு என்னாச்சு பாருய்யா’ எஸ்.ஐ முனுமுனுக்க, காரின் அருகே ஓடிய காவலர் திடுக்கிட்டு,


‘எங்கேயோ விசேசத்துக்கு போயிட்டு வந்திருப்பாங்க போலிருக்கு சார்... ஐயோ சார், ரெண்டு கொழந்தைகள் வேற இருக்கு சார், உசுரோட இருக்க மாதிரி தெரியலையே’ என்றார்.


எஸ்.ஐ அருகே இருந்த ஆட்களிடம் ‘யப்பா.. வெளிய எடுக்க முடியுமா பாருங்க’ என்றார்.. சிதைந்தது கார் மட்டுமல்ல, உள்ளே இருந்தவர்களும்தான் என்பது பின்புதான் தெரிந்தது. ஒருவர் உயிரும் மிஞ்சவில்லை. இரண்டு மூன்றுபேர் சேர்ந்து ஒவ்வொருவராய் வெளியே எடுத்தனர். பின்பு ஆம்புலன்சில் ஏற்றினர். சிலரை முழுமையாகவும் சிலரை மூட்டையாகவும்.

+++++++++++++++++++++++

அதிகாலை மணி 4:40

அங்கு, காவல் வாகனம் அருகே..!

லாரி டிரைவர் கோபமாக காவலர் ஒருவரிடம் வாக்குவாதம் செய்துகொண்டு இருந்ததை கண்ட எஸ்.ஐ ‘என்னவாம்யா’ என்றார் கடுப்புடன்.

‘நீங்களே வந்து என்னன்னு கேளுங்க சார், ஓவரா பேசுறான்’ என்றார்.

எஸ்.ஐ வேகமாய் வந்து ‘என்னய்யா, என்ன சொல்லு’

‘சார், இப்டிதான் ஹைவேயில் திடீர்னு குறுக்கே புகுந்து லாரியை மறிப்பிங்களா..?  ரெண்டு கிலோமீட்டர் முன்னாடி உங்க சோதனை சாவடி இருக்குல்ல, அங்கேயே லாரிகளை எல்லாம் நிப்பாட்டிவிட்டு போயிருக்கலாமே, இப்போ பாருங்க என்ன ஆச்சுன்னு...’

‘வாய மூடிகிட்டு இருந்தா உனக்கு நல்லது’ என்று இடைமறித்தார் எஸ்.ஐ

‘வாய மூடிட்டா, போன உசுறேல்லாம் ஒவ்வொன்னா திரும்பிடுமா, கண்ட இடத்தில் நின்னு குறுக்க விழுந்து லாரியை மறிக்குறது, என்னதான் உங்களுக்கு வேணுமோ.. அதான் ஒவ்வொருதடவையும் லோடு ஏத்திகிட்டு போறப்போ துட்டு அழுறோமில்ல.. இதுல இப்டி....’

‘யோவ்.. இவனை லாரியை எடுத்துகிட்டு ஸ்டேஷன் வரசொல்லு. கொஞ்சம் வாய அடக்குனாதான் சரிப்படும்..’

+++++++++++++++++++++++


ஒரு வாரம் கழித்து.!

ஸ்டேஷனில்..

‘சார்.. அந்த கார் அக்சிடென்ட் குடும்பத்துல இருந்து....’

‘வரச்சொல்லுய்யா’ என்றார்  எஸ்.ஐ.

பிரபாவின் அண்ணன் வெளிறிய முகத்துடன் உள்ளே நுழைந்தான். கூடவே இன்சுரன்ஸ் அலுவலரும். எஸ்.ஐ-யுடன் கலந்து ஆலோசித்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.

‘சார்.. வாங்க டீ குடிச்சிட்டு போகலாம். சென்னைல இருந்து வர்ற வழியில் நீங்க ஒண்ணுமே சாப்டலையே..’ என்றார் இன்சுரன்ஸ் அலுவலர்.

‘வேணாம் சார்.... அய்யோ... சாரி..  நீங்க...  சரி வாங்க...  என்னால நீங்களும் ஏன்... வாங்க போவோம்.. அதோ அந்த டீ ஷாப்புக்கு’ என பிரபாவின் அண்ணன் டீ கடை நோக்கி நகர...

‘சார்’ என ஒருவன் அருகே வந்து நின்றான். அவன் முகத்தை பார்த்துவிட்டு  இன்சுரன்ஸ் அலுவலரும் பிரபாவின் அண்ணனும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துகொண்டனர். வந்தவனோ, சரியாக பிரபா அண்ணனிடம்தான் பேச ஆரம்பித்தான்.

‘சார்’ அன்னைக்கு அக்சிடென்ட் நடத்தப்ப எல்லோரையும் நாங்கதான் சார் வெளிய எடுத்தோம். நாங்க மூனுபேரு சார்.. ஏதாவது பாத்து பண்ணிட்டு போங்க சார்’ என்றான்.

‘ஏம்பா.. நீ யாருன்னே எங்களுக்கு தெரியாதே... . ஆஆஆமா நாங்கதான் அந்த அக்சிடென்ட்ல இறந்தவங்க வீட்டுக்காரங்கன்னு உனக்கு யார் சொன்னது’

‘சார்.. என்ன சார்.. நடுரோடு அது.. இறந்தவங்களை எடுத்து ஆம்புலன்சில் போட்டு அனுப்பி இருக்கோம்... அதெல்லாம் விட்டுட்டு...’

அவனை நெருங்கிய பிரபாவின் அண்ணன் ‘பளார்’ என்று ஒரு அறைவிட்டு ‘இன்னைக்கு நாங்க இங்க வருவோம்னு உனக்கு எப்டிடா தெரியும், சொல்லிவச்ச மாதிரி வந்து நிக்குற’

‘யோவ்.. என்னையே அடிச்சிட்டியா, உன்ன என்ன....’என கடுகடுத்தவனை மீண்டும் பளார்..பளார் என்று பிரபாவின் அண்ணன் அறைய, இன்சுரன்ஸ் அலுவலர் விழுந்து தடுத்தார்..

‘பொறுமையா இருங்க சார்.. யோவ்.. யாருய்யா உனக்கு சொன்னது’ என கடுப்பானார்.

‘எஸ்.ஐ’ என்றான்..   பிரபாவின் அண்ணன் கடுப்பாகி ஸ்டேஷன் பக்கம் திரும்புகையில் வாசலில் இருந்து ஒரு காவலர் உள்ளே சரேலென்று திரும்பி ஓடி மறைந்தார்..

பிரபாவின் அண்ணன் அவன் சட்டையை பிடித்து ‘அட மனித மிருகங்களா.. என் குடும்பம் அன்னைக்கு ஒரு திருமண விசேசத்துக்கு போயிட்டு வந்த வேளைடா அது.. ஆஸ்பத்திரியில் பார்க்குறப்போ அவங்க போட்டிருந்த நகை, பணம் ஒண்ணுகூட இல்ல.. விசாரிச்சு பார்த்தா அம்புலன்சில் ஏத்துறதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் சுருட்டிடிங்கன்னு இப்போதான் புரியுது’ என்று அவனை உலுக்க, அடுத்த நொடி அவன் எகிறிவிட்டு தெரித்தோடினான்.

இன்சுரன்ஸ் அலுவலர் திகைப்பாய் ‘என்ன சார் இது..  அப்போ இப்டியெல்லாம் கூட்டு வச்சி படுபாவிங்க என்ன காரியம் பண்ணுறானுங்க.... எத்தனை பவுன்.. எவ்ளோ பணம்..’ என்றார்.

‘அறுபது சவரனுக்கும் அதிகம் சார், கையில் இருந்த பணம் கம்மிதான்..’ இப்டியெல்லாம் மனுசங்க இருக்காங்க பாருங்க சார்.  இதுல நீங்க வேற ஏழு பேரு போற வண்டியில் எட்டு பேரு போயிருக்காங்கன்னு சிறு பிள்ளைகளையும் கணக்கு காமிச்சு இன்சுரன்ஸ் கிடைப்பது கஷ்டம்னு சொல்லுறீங்க, இங்க மனசாட்சியோட மனுசங்க யாருமே இல்லையா சார்’ என்றவன் எழுந்து தன் வாகனம் அருகே கண்கள் கலங்கியவனாய் சென்றதை தேமே என இன்சுரன்ஸ் அலுவலர் பார்த்துகொண்டிருந்தார்.

+++++++++++

அன்று பின்னிரவு..! திருச்சி to சென்னை பரபர சாலை..


ஒரு சோதனைச்சாவடி கடந்து ஒரு இரண்டு கிலோமீட்டர் தொலைவே இருக்கும்.....! எதிபார்த்ததுபோலவே ஒரு ஒரிஸ்ஸா மாநில லாரி வந்துகொண்டிருக்க.. தங்களின் வாகனம் விட்டு சாலை நடுவில் வந்த ஒரு காவலர் அந்த லாரியை மடக்கி ஓரம்கட்டிக்கொண்டிருந்தார்.!




++++++++++++++++++
பூங்குன்றன்
++++++++++++++++++

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...