முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெந்தபுண்ணில் வெச்ச வெடிகள்..!




ஊருக்கொரு இஞ்சினியரு மலையேறி போனகாலம்
முக்குக்கு ரெண்டுபய நிக்கானே மந்திகணக்கா
எங்கய்யன் படிக்கலையே நானுந்தேன் அப்படியே
மவராசா என்மகனே நீ ஏன் ஆன இஞ்சினியரு.!

அரைவயிறு கொரவயிறு எப்பவாச்சும் சுடுசோறு
ஆனாலும் செவனேன்னு படிச்சியேடே ஏராசா
ஊரென்ன சொன்னாலும் உடும்பாட்டம் படிச்சுபுட்ட
அடுத்தென்ன வேலையின்னு கேக்குதடே ஊருசனம்..!

வெள்ள மனசுபுள்ள நீ படிச்ச படிப்பெதுவோ
காடு கரை வித்த மண்ண கண்ணீரு காசாக்கி
வீடு மாடி ரோடு போட நல்லாத்தான் நீ படிச்ச
வீடு ஒன்னு பாக்கியிருக்கு அதகாக்க வேலைபாரு..!

நல்லவனா நா உன்ன வளர்த்ததுதான் தப்பாச்சோ
நீபோன எடம் எல்லாமே தப்பாதான் தெரிஞ்சிச்சோ
மவராசா எம்மவனே தப்பிச்சி வந்துடுடே
கொலைகார கூட்டத்துல உசுராவது மிஞ்சிடுமே..!

போட்ட ரோடு காயுமுன்னே புட்டுகிட்டா உனக்கென்ன
ஏறி குளம் தூர்வார அவக வயித்தில் போட்டா உனக்கென்ன
மண்ணை கொள்ளை அடிச்சாதான் நீ ஒதுக்கிவந்துபூடு
கண்ணெல்லாம் தேடுதப்பா உசிரோட இருக்கியாடே..!

தெரியாம உன்னத்தான் தெம்புக்கு படிக்கவச்சேன்
வெள்ளந்தி மனசுக்காரா படிச்சியேடே பலபாடம்
தப்புகள கண்டுக்காம விட்டுடத்தான் படிக்கலியோ
தட்டிகேட்டா உசுருபோகும் உனக்காரும் சொல்லலியோ..!

பெத்தவயிறு குளிருது உன்நேர்மையத்தான் நெனைக்கையில
அடுத்தகனம் பத்திகிட்டு எரியுதேடே கொலைகார ஊரிதுடே
போதுமடே படிச்சதுக்கு நீபாக்கும் வேலையெல்லாம்
நல்லதுக்கு காலமில்லை வந்துபுடு வீட்டுக்குத்தான்..!

தாசில்தார வெரட்டிபோட்டு மண்ணு வண்டியேத்தி கொன்னுடுறான்
தடுக்கபோன போலீசு குடும்பத்த தரைமட்டம் ஆக்கிடுறான்
இஞ்சினியரு நீயெல்லாம் எம்மாத்திரம் ஏ மவராசா
வெரசாத்தான் வந்துசேரு வெவசாயம் பாத்துக்கலாம்.!!

-பூங்குன்றன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...