‘பக்தா உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்.!’
‘வரம் எல்லாம் வேணாம் சாமி, ஒரு துப்பாக்கி
வேண்டும். அதுல தோட்டாக்கள் என்றுமே தீரக்கூடாது, நான் யாரை சுட்டாலும்
தெரியக்கூடாது’
‘பக்தா, ஏன் இந்த ரத்தவெறி?’
‘சாமி, நீ ஒருதாய் மக்களாய் எங்களை படைச்ச. பலருக்கும்
நல்லது சொன்ன. பயபுள்ளைங்க அதை ஆளுக்கு ஒரு விதமா புரிஞ்சிகிட்டு நான்தான் சரி,
நீதான் சரி அப்டின்னு அகராதி பிடிச்ச மாதிரி மதத்தை உருவாக்கிட்டாங்க’
‘அது அரைகுறைகள்
உங்களின் பிழையல்லவா..?’
‘அது போகட்டும்,
ஒவ்வொரு மனுசங்களும் ஒவ்வொருத்தர மதிச்சு நடக்க, நேர்மையாய் வாழ, உத்தமமாய் வாழ்வை
கொண்டாட பல போதனைகளை சொன்ன. ஒருத்தரும் கண்டுக்கல, அதை விட்டுட்டு இப்போ அடிசிகிட்டு
சாகுராணுங்க, எல்லாத்திலும் லஞ்சம், ஊழல், கொள்ளை, கொலை, பாலியல் கொடுமை, திமிரான
போக்கு........’
‘போதும் போதும்,
லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது’
‘ஓ.. சாமியும் வடிவேலு படம் பாப்பீங்க போலிருக்கு’
‘ஹா.ஹா.ஹா.. எனக்கு மறைவானதொன்றும் இங்கு இல்லை பக்தா, நீ
இருளில் மறைந்தாலும் வெளிச்சத்தில் நடந்தாலும் எல்லாம் எனக்கு ஒன்றுதாம். என்னில்
இருந்து எதுவும் மறைக்கப்பட இயலாது’
‘அப்புறம் ஏன் இவ்வளவு
அக்கிரமங்கள் நடக்கின்றன சாமி’
‘அட, அற்பனே..
என்னிடம் இதை ஏன் கேட்கிறாய்..’
‘என்னாது.. உன்னிடம்
கேட்காம வேற யாரிடம் போயி சொல்லுறதாம், ஏன்.. கேட்டா என்ன தப்பு, நீதானே எங்களை
படைச்சது, இப்போ இவ்ளோ கொடுமைகள் நடக்குது, உன் கண்ணுக்கு மறைவானது எதுவும்
இல்லைன்னு பெருமையா சொல்ற, பின்ன வேடிக்கை பார்த்துட்டு நிக்குற.. பலரும் இதனால
கடவுளே இல்லைன்னு அவுங்க தனி குரூப்பா இருக்காங்க, இதுக்கெல்லாம் யார் காரணம்..?
ஏன் தவறை தட்டி கேட்கலை, தண்டனை தரலை’
‘அட, சிறுவனே.. உங்களுக்கு
நல்ல காற்றை தந்தேன், சுவாசிக்கும் ஒருவரும் அதை ஏன் தந்தீர் என்று கேட்கவில்லை..
சிறந்த நீரை தந்தேன்.. அருந்திய ஒருவரும் அதை ஏன் நான் படைத்தேன் என்று
வினவவில்லை, மானுடம் வாழ தக்க தகவமைப்புடன் இந்த பிரபஞ்சத்தில் இவ்வுலகை நான்
படைத்தேன்.. ம்ம்.. ஏன் இது என்று யாரும்
எதுவும் சொல்லவில்லை...’
‘மன்னிக்கணும்,
எல்லாம் சரிதான்.. ஆனா நா கேட்டதுக்கும் சாமி நீங்க அடுக்கிகிட்டே போறதுக்கும்...’
‘சம்பந்தம்
இருக்கப்பா, நன்மைகளை நான் உங்களுக்காக படைத்தேன், அதின் மொத்த மகத்துவத்தையும்
இயற்கைக்கு கொடுத்தீர்கள், அந்த இயற்கையே நான் உருவாக்கியது என்பதை மறந்து,
போகட்டும். அவ்வளவும் புரிந்தால் பின் அதற்கொரு மதம் முளைக்கும்..
சரி விடயத்திற்கு
வருகிறேன். இப்படி நன்மைகளை அனுபவிக்கும் நீங்கள் எனக்கு சம்பந்தமே இல்லாத, நீங்களே
உங்களுக்குள் செய்துகொள்ளும் தீமையை குறித்து என்னிடம் ஏன் இப்படி நடக்கின்றது என கேட்க
என்ன தகுதி இருக்கிறது?’
‘.................’
‘ஒரு மரத்தை நான்
தந்தேன், அதின் கனிகளை ருசித்து அதின் நிழலில் மகிழ்ந்து வாழ உங்களுக்கும் எப்படி
உங்கள் இஷ்டப்படியான வாழ்வை சுதந்திரமாய் பெற்றீர்களோ அதுபோல எது நல்லது எது
கேட்டது என நீங்கள் அறிய ஆறாவது அறிவாய் மெய்ப்பொருள் அறியும் உள்ளத்தையும்
உங்களுக்கு தந்தேனே.. பிறகு நீங்கள் செய்யும் தவறுகள் நல்லது அல்ல என்று
தெரிந்தும் செய்வது உங்கள் பிழை.. இதில் என் பங்கு என்ன இருக்கிறது..’
‘அதலால, அடிசிகிட்டு சாகுங்கன்னு விட்ருவீங்க..?, தப்பை
தட்டி கேட்க மாட்டிங்க?’
‘கேள், இந்த உலக
வாழ்வு மறுமைக்கான பயணம்தான். அதற்கான நுழைவுச்சீட்டு உங்களின் நடத்தையே’
‘புரியுது, நல்லவன்
மறுமையில் நுழைவான், தீமை செய்பவன்......’
‘அவனுக்கு ஐயோ, அவன்
பிறவாதிருந்திருந்தால் நலமாய் இருக்கும் என்று வருத்தப்படும் அளவிற்கு அவன் மறுமை
இருக்கும், ஆனால் அவனுக்கான பாதை அழிவு’
‘அப்போ, அதுவரை எல்லா
கஷ்டங்களையும், அழிவுகளையும் சகிசிக்கிட்டுதான் இருக்கனுமா, இது என்ன கொடுமையா இருக்கு’
‘பொறு, தீயவன் தீமை
செய்வது நல்லவன் அதை தடுக்காதிருக்கும்வரைதான். நல்லவர்கள் சிலர் உணர்வடைந்தால் தீயவன்
ஓடி ஒழிவான், கூடவே தீமையும்தான்..’
‘அதுக்குத்தான் சாமி
எனக்கு துப்பாக்கி வேணும்.. தோட்டா தீராது இருக்கணும்.. நான் சுடுவதும் யாருக்கும்
தெரியக்கூடாது, என்னால் முடிந்த வரையில் லஞ்சம் வாங்கும் இழிபிறவிகளையும்,
பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் கயவர்களையும், மக்கள் நிம்மதியை கெடுக்கும் தரித்திரரையும்
நான் சுட்டுத்தள்ள வேண்டும்..... ஐயோ.. சாமி என்ன இது..? என் கண்ணில் இருந்து
மறையுறீங்களே.. இருங்க சாமி... துப்பாக்கியாவது கொடுத்துட்டு போங்க..சாமீ....’
‘டேய்.. டேய்.. எழுந்திரிடா. மணி ஏழு ஆகுது, தூக்கத்தில் பொலம்புறதே
வேலையா போச்சு உனக்கு’ அம்மா உதைத்து என்னை எழுப்பினாள்.
‘ச்சே, கனவா இது’ என
புரண்டு படுக்கையில் முதுகில் ஏதோ அழுத்தியது.. சற்று அப்புறம் புரண்டு திரும்பி
என்னவென்று பார்த்தான்..!
பளிச்சென மின்னியதோ
ஒரு துப்பாக்கி..!
---
மறுநாள் இரவு 11மணி..!
ரயில் நிலையம் அருகே
ஒரு பெண்ணை இரு வாலிபர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.
அவளின் பதட்டமான நடை அவளின்
பயத்தை உணரவைத்தது. அவர்கள் செல்போனை
எடுத்தவாறே அவளை நெருங்கினர். ஆளில்லா தெருமுனையில் அவள் திரும்புகையில் அவளை
இடித்தவாறே நெருங்கினான் அதிலொருவன்.
அவள் ஓட
எத்தனிக்கையில் அவள் காலை இடறிவிட்டான் மற்றொருவன். தொப்பென விழுந்தாள் அவள்.
‘இறைவா காப்பாற்று’
என அதிர்ச்சியில் உதடுகள் வேண்டியது.
ஒருவன் மொபைல் கமராவை
எடுத்து படம் பிடிக்க துவங்குகையில்..
‘பொத்’ என வேரறுந்த
மரம் போல விழுந்தான்..! நெற்றி பொட்டில் இருந்து பொசுக்கென இரத்தம் வழிந்தது..!
மற்றவனுக்கு என்ன
நடக்கிறது என்று புரியாமல் குழம்பி நிற்கையில், அடுத்து அவன் நெற்றிபோட்டும் விஸ்க்க்
என குருதியை கொட்டியது..! சரிந்தான்.!
அவள் திகைத்தவளாய்,
சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரு சலனமமுமில்லை.. ஒருவருமில்லை.. மெல்ல எழுந்து ஓடி
இருளில் மறைந்தாள்.!
--
பூங்குன்றன்


கருத்துகள்
கருத்துரையிடுக