ரோபோ அரசாங்கமும் நம்முடைய நிலைமையும்
//கற்பனை ஆக்கம் : பூங்குன்றன்//
.....
ரோபோ : (கனிவான குரலில்) நெக்ஸ்ட்..!
பயனாளி : நான் தாங்க.. வணக்கம்..
ரோபோ : வணக்கம். உங்களுக்கு நான் எப்படி உதவ முடியும்.
பயனாளி : கேள்வியே தப்பு. என்ன உதவி பண்ணனும்னு கேளு
ரோபோ : அவசியம் இல்லாத பதில், என்ன விஷயமா வந்து இருக்கீங்க
பயனாளி : (ரோபோவை முறைத்துக் கொண்டு) வருமானச் சான்றிதழ் வேணும்
ரோபோ: கண்ண காட்டு போதும்.. விவரத்தை நானே சொல்றேன்
பயனாளி : நல்ல பாட்டா இருக்கே. ரிங்டோன் எடுத்துக்கவா
ரோபோ: யோவ்.. கண்ண காமிய்யா ஸ்கேன் பண்ணிக்கிறேன்.
பயனாளி : அப்படி விவரமா சொல்லு,
ரோபோ: வருமானச் சான்றிதழ் மட்டும் போதுமா
பயனாளி : ஆமா, பிரிண்ட் போடு எடுத்துட்டு போறேன்
ரோபோ: ஆமா உன் வருமானம் வருஷத்துக்கு எவ்வளவு
பயனாளி : கூலி வேலையின் மூலம் வருட வருமானம் 72 ஆயிரம் ரூபாய் என்று போட்டுக் கொடு
ரோபோ: எதே.. 72,000 ரூபாயா.. வருடத்துக்கா..
பயனாளி : ஆமா போன வருஷம் எங்க ஊர்ல அப்படித்தான் வாங்கினேன்.. இந்த வருஷம் தான் எல்லாத்தையும் கம்ப்யூட்டர் ஆகிட்டாங்க...
ரோபோ: என்னய்யா.. என்ன நெனச்சிட்டு பேசுற.. நான் என்ன உங்க ஊரு விஏஓ என்று நினைச்சியா. நீ சொன்னதை போட்டு கொடுக்க..
பயனாளி : நான் உண்மையத்தான சொல்ற கூலி வேலைதான் பார்க்கிறேன்
ரோபோ: யோவ்.. வடக்கிலிருந்து இங்க வந்து வேலை பார்க்கிறவங்களுக்கே ஒரு நாள் கூலி 800 ரூபாய். வாரத்துக்கு லீவு போக 4800 ரூபா.. வருடத்துக்கு 2,49,600 ரூபா ஆகுது.. காலையில தான் டிம்பிள் பட்டேலுக்கு வருமானச் சான்றிதழ் கொடுத்து அனுப்பினேன். மகிழ்ச்சியா வாங்கிட்டு போயிட்டான்.
பயனாளி : (சற்று திகைப்போடு) இந்த டிம்பிள் கணக்கு இங்க ஆகாது. மனுஷனுக்கு உடம்பு சரி இல்லாம போகும்.. எல்லா நாளும் வேலை கிடைக்க மாட்டேங்குது.. நீ சொன்ன டிம்பிளு, டெம்பிள்னு யார் யாரோ வந்து இங்க வேலை பாக்குறாங்க இங்க இருக்கவனுக்கு வேலை இல்ல..
ரோபோ: யோவ்.. நிறுத்து.. உன் பஞ்ச பட்ட பாட இங்க நேரம் இல்ல,
பயனாளி : எது பஞ்சப்பாட்டா.. நான் மேலதிகாரி யார்கிட்டயாவது பேசுகிறேன்.
ரோபோ: அப்படி எல்லாம் யாரும் இங்க இல்ல. பிறப்புச் சான்றிதழ தர்றதில் இருந்து நீ செத்ததுக்கு அப்புறம் இறப்புச் சான்றிதழ் வரை நாம் மட்டும்தான்.. நான் ஒரே கருவி தான்.
பயனாளி : முடிவா என்ன சொல்ற
ரோபோ: உன்னுடைய வருட வருமானம் 4 லட்சத்து முப்பத்து ரெண்டாயிரம் ரூபாய்
பயனாளி : (லேசான மயக்கத்தோடு பக்கத்தில் இருந்த தூணை பிடித்துக் கொள்கிறார்)
ரோபோ: என்னையா ஒரு மாதிரி சாஞ்சி நிக்கிற.. தண்ணி அடிச்சிட்டு வந்து இருக்கியா காலையிலேயே..
பயனாளி : அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ என்னோட வருமான கணக்க சொன்னியே அதுதான் பக்குனு இருக்கு.. இவ்வளவா நானு போன வருஷம் சம்பாதிச்சேன்
ரோபோ: உன் அக்கவுண்ட்ல வரவு வந்தது அவ்வளவுதான்.
பயனாளி : அய்யய்யோ.. அநியாயம்.. என் அக்கவுண்ட்ல உள்ளது எல்லாம் உனக்கு எப்படி தெரியும்..
ரோபோ: இப்பதான்யா கண்ண காட்டிக்கிட்டு நின்ன.. ஸ்கேன் பண்ணுன உடனே பாரு எல்லா தகவலும் வந்துருச்சு. மனசாட்சியே இல்லாம 72,000 ரூபாய்க்கு கேக்குறியேபா..
பயனாளி : கண்ணு மட்டும் தானே ஸ்கேன் பண்ணுன..
ரோபோ : அட ஆமாம்யா . இப்போ உன் கண்ணு கருவிழி பேதார் கூட இணைச்சி இருக்கு.. பேதார் கூட PAN கப்ளிங் பண்ணி பல வருடம் ஆகுது.. PAN கார்டு உன் பேங்க் அக்கவுண்ட் ல லைன் இருக்கு. பேங்க் அக்கவுண்ட்ல தான் எல்லோரும் Gpay, My pay, Upay இப்படி போட்டு தெறிக்க விடுறீங்க. ரெண்டு ரூபாய்க்கு பல்லி பல்லி மிட்டாய் வாங்கினாலும், வித்தாலும் கணக்கில் ஏறுதுல்ல..
பயனாளி : ஐயோ நான் கூட அவ்வளவு பணத்தை முழுசா பார்க்கலையே..
ரோபோ: எங்கய்யா பாப்ப.. உன் அக்கவுண்ட் விவரத்தை மேலோட்டமா சொல்றேன்.. கேளு.. தினசரி 380 ஓவா சரக்கு கடைக்கு போகுதுடா சனியம்புடிச்சவனே. அப்புறம் மாசம் மாசம் மண்டல் குமாரி அப்படிங்கிற பொண்ணுக்கு குறிப்பிட்ட தொகை Gpay அனுப்பிட்டு இருக்க.. அது என்ன எழவு கணக்கோ தெரியல.
பயனாளி : எது.. மண்டல் குமாரிக்கு மாசா மாசம் பணமா.. பெருத்த அவமானம், என்னோட அக்கவுண்டை வடக்கு வாழ் ஆத்மி ஹேக் பண்ணிட்டான்னு நினைக்கிறேன்.
ரோபோ: அது மட்டுமா.. மொபைல் ரீசார்ஜ் மட்டும் போன வருஷம் உனக்கு 8000 ரூபாய்க்கு பண்ணி இருக்க நீ. உன் குடும்பத்துக்கு மட்டும் 27000 ஆகுது மொபைல் ரீசார்ஜ் க்கு மட்டும். ஆமா.. அது யாருயா சீனி பாபா..
பயனாளி : ஆங்.. சீனி பாபா.. அது என் ரெண்டு வயது பையன்..
ரோபோ : அவனுக்கு ஸ்கூல் பீஸ் மட்டும் 90 ஆயிரம் ரூபாய் கட்டிருக்க நீ.. யோவ்.. சீனிக்கு இவ்வளவு பணம் கட்டினவன் என்னோட டேட்டாவிலேயே நீதான்யா..
பயனாளி : அய்யய்யோ.. போதும்.. வருமானச் சான்றிதழ் தான் வாங்க வந்தேன்..
ரோபோ: என்ன பிரின்ட் போடட்டுமா..
பயனாளி : போட்டுடு.. சீனி பாபா ஸ்கூல்ல இருக்கிற ரோபோ வாங்கிட்டு வரச் சொன்னது.. ஒரு சலுகைக்காக தான் கொஞ்சம் கம்மி பண்ணி கேட்கிறேன்.. நீ கொடுத்துட்டேன்னா அது ஸ்கேன் பண்ணி பீஸ் கம்மி பண்ணி என் பயல ஸ்கூல் உள்ள விடும்.
ரோபோ: பிரின்ட் போட்டுட்டு இருக்கேன்.. என் வயித்து வழியா வெளியில வரும் பாரு.. எடுத்துட்டு போ.
பயனாளி : (எடுத்த பிரண்டை பார்த்துட்டு முகம் சிவக்கிறார்) என்ன இது.. கணக்கு இடிக்குது
ரோபோ: வாய்ப்பில்லை.. நம்ம கணக்கு தப்பாது.
பயனாளி : வருட வருமானம் 4 லட்சத்து முப்பத்து ரெண்டாயிரம் ரூபாய் அப்டின்னு சொன்ன.. இப்போ 4 லட்சத்து முப்பது ஆயிரம் தான் பிரிண்டில் போட்டிருக்க. இவ்வளவுதான் கம்மி பண்ண முடியுமா.
ரோபோ: கம்மி எல்லாம் இல்ல.. 2000 ரூபாய் சர்வீஸ் சார்ஜ், போன வருஷத்து கணக்குல தான் எடுக்க முடியும்.
பயனாளி : இது அநியாயம்.. அது எப்படி போன வருஷத்து கணக்குல இப்ப சர்வீசிக்கு 2000 ரூபா எடுப்பீங்க.
ரோபோ: இது போன வருஷத்துக்கான வருமான சான்றிதழ்.. (பீப்.. பீப்..) பிரிண்ட் வாங்கிட்டல்ல.. உன்ன நேரம் முடிந்தது நீ போகலாம்
பயனாளி : இதுக்கு நியாயம் கிடைக்காம போக மாட்டேன்
ரோபோ: நியாயத்தை கோர்ட்டில் போய் பதிவு பண்ணி வழக்கு போட்டு பாத்துக்க. அதுக்கு ஒரு ரிசிப்ட் வேணும்னா பிரிண்ட் போட்டு தர்றேன்.. அதுக்கு தனியா 100 ரூபாய் சார்ஜ் ஆகும். அத வேணும்னா இந்த வருஷ வருமான கணக்கில் கழிக்கலாம்.
பயனாளி : என்னால் தாங்க முடியலையே.. அய்யோ.. மனுசங்க யாருமே அதிகாரியா இல்லையா..
ரோபோ: மனுஷங்களை பெரும்பாலும் நாங்க நம்புவதில்லை. இப்ப புலம்பாத.. உனக்கு நேரம் முடியுது. இப்போ 30 வினாடிகளுக்குள் கதவு மூடப்படும்
பயனாளி : ஏதே.. மூடிடுவியா நீ.. கதவு கீதவெல்லாம் சின்னா பின்னமா நொறுக்கிட்டு போயிருவேன்.. ஆபீஸ் அதல சிதல ஆயிடும்.. நான் யாரு தெரியுமா..
ரோபோ: கவுண்டிங் ஸ்டார்ட்.. 30..29
28..
பயனாளி : என்ன நடந்தாலும் பரவாயில்லை. எங்க ஆண்ட பரம்பரையில் ரோபோ கிட்ட தோத்ததா சரித்திரம் வந்திட கூடாது..
ரோபோ: விதிகளை மீறி நடப்பது குற்றம். 30 வினாடிகளுக்கு பிறகு லேசர் பாய்ச்சப்படும். 22, 21... 20...
பயனாளி : என்னாது.. கேசரி பாச்சுவியா...
ரோபோ: தவறு.. அது லேசர்.. நீ போட்டு இருக்க பேண்ட்... டவுசர் முதற்கொண்டு பொசிக்கி விட்டுரும். உன் நல்லதுக்கு சொல்றேன். பயங்கர சேதாரத்தை சந்திக்க வேண்டி வரும். பிறந்த மேனியா கையில வருமானச் சான்றிதழை வச்சுக்கிட்டு சூடு தங்காம வீட்டை நோக்கி ஓடுனா நல்லா இருக்குமா.. இன்னும் 15 வினாடிகள் இருக்கு.. பேசாம கிளம்பிடு..
பயனாளி : உன்ன மறுபடி சாயந்தரம் ஆளுங்களை கூட்டிட்டு வந்து பாத்துக்குறேன்..
ரோபோ: மன்னிக்கனும்.. இப்போ ஸ்லாட் ல இடம் இல்லை.. உனக்கு அப்பாயின்மென்ட் வரும் நாலாம் தேதி காலை 9:00 மணிக்கு போட்டுத்தரவா.. நேரம் குறையுது. 10..9...8
பீப்.. பீப்..
பயனாளி : (பீப் சத்தமும் இருக்கிற இடம் லேசாக சூடு ஏறுவது கண்டு
தலை தெறிக்க வெளிய ஓடுகிறார்..)
....
ரோபோ: (கனிவான குரலில்) நெக்ஸ்ட்..!
....
கருத்துகள்
கருத்துரையிடுக