முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடல் பார்த்து அழுதவன்.!

கடல் பார்த்து அழுதவன்.!

கடல் அவனுக்கு பிடிக்காத ஒன்று. கடல் என்றாலே உப்பு தண்ணீரும் அலைகளின் இரைச்சலும் ஆங்காங்கே மீன்களின் நாற்றமும் நினைவுக்கு வரும். போதாத குறைக்கு சுனாமி வேறு. 

எனவே கடல் பொதுவாகவே அவனுக்கு பிடிக்காமல் போய்விட்டது.!

ஆனால் நீண்ட வருடங்களுக்கு பிறகு அவன் கடற்கரையில் அமர்ந்திருந்தான். 
அதுவரை பிடிக்காத கடல் அவனை ஏதோ ஒரு விதத்தில் அவனை இன்று வரவழைத்து விட்டது.!

கடல் பெரியதுதான். தன்னைப் பிடித்த பிடிக்காத மனிதர்களை விட ரொம்ப பெரியது.

வந்து விடுகிறாயா உன்னையும் சேர்த்துக் கொள்கிறேன் என்பது போன்று ஒவ்வொரு அலைகளும் அவனை நோக்கிய வருவதும் பிறகு அவனின் மௌனம் கண்டு ஏமாந்து தலை கவிழ்ந்து செல்வதுமாக இருந்தது.!
ஆனாலும் அலைகள் ஓய்ந்தபாடில்லை.!
அலைகளின் குணமே அதுதானே. 

உன்னோடு வாழ்வதற்கு எங்கேயாவது போய் செத்து விடலாம் என்று அவள் சொன்னதுதான் மீண்டும் மீண்டும் அவன் புத்திக்கு வந்தது. 
ஒவ்வொரு அலைகளின் போதும் அவள் சொன்ன வார்த்தைகள் தான் அவனுக்கு நினைவுக்கு வருகிறது. 
பிறகு அலைகள் பின்னோக்கி செல்லும்போது அவன் அதை மறக்க நினைக்கிறான் ஆனாலும் வேறு ஒரு அலை அதைவிட பெரிதாக வந்து மீண்டும் நினைவூட்டுகிறது. 

அப்படி அவளுக்கு நான் என்ன கொடுமை செய்து விட்டேன், அவள் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டி பொம்மை போல் ஒருவேளை நான் இருந்திருந்தால் இந்த வார்த்தையை அவள் சொல்லி இருக்க மாட்டாள். 

ஒருவேளை  youtube களிலும், இன்ஸ்டாவிலும் ரீல் போடும் தம்பதிகள் போல நானும் நடித்திருந்தால் வரும் லைக்குகளை பார்த்தாவது அவள் மகிழ்ந்திருப்பாள் போலிருக்கிறது. 

காலை முதல் மாலை வரை வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தை சாராயக்கடைகளில் கொடுத்து குடித்து சாலையில் மிதந்து கொண்டு வீட்டுக்கு வந்து இருந்தால் ஒரு வேலை அவள் மூக்கை பொத்திக்கொண்டு வாழ்க்கையை ஓட்டியிருப்பாளோ என்னவோ.

தனக்கானவள் என்னதான் தன்னிடம் எதிர்பார்க்கிறாள் என்பது தெரியாமலேயே ஆறடி மண்ணுக்குள் போகின்ற அநேகருக்குள் நானும் ஒருவனாக மாறிவிட்டேன் போலிருக்கு என்று பிரமையோடு அவன் அங்கு அமர்ந்திருந்தான். 

"சார் கடலை வேண்டுமா" யாரோ ஒரு பெண்ணின் குரல். திரும்பி அவனுக்கு இப்படியும் வாழ்க்கை வாழும் பெண்கள் இருக்கிறார்களே என்று தான் தோன்றியது. இவர்கள் வீட்டில் எல்லாம் பிரச்சனைகள் வராதா அல்லது வந்த பிரச்சனைகளை இவர்கள் சமாளித்துக் கொண்டு போகிறார்களா? அல்லது இவர்களும் பிரிந்து தான் வாழ்கிறார்களா, அல்லது பிரிந்து விடுவது தான் நிம்மதியா என்ற கேள்வி அவனுக்குள் இருந்தது. 

"வேண்டாம்."

என்ற அவன் பதில் கடலை விற்கும் பெண்ணுக்கும், கடலை பார்த்துக் கொண்டிருக்கும்போது எழுந்த கேள்விகளுக்கும் ஒரே பதிலாக இருந்தது.

ஒரு சில நிமிட நிசப்தமாக, ஊஞ்சல் அலைகளின் மீது மிதந்த கடல் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தது. 

"பூ வேணுமா சார்.?"
மெல்ல தலையை நோக்கி சப்தம் வந்த திசையில் கூடையுடன் வந்த பெண்ணை பார்க்கும் போது அந்த பெண் புரிந்து கொண்டால் இவன் தனியாக வந்திருக்கிறான் போலிருக்கிறது என்று. 

"வீட்டுக்காவது வாங்கிட்டு போலாம்ல என்றாள்"

அவன் ஒண்ணுமே சொல்லாமல் கடல் பக்கம் திரும்பிக்கொண்டான்.

"இல்ல..... இன்னைக்கு ஒன்னும்  சரியாவே பூ விக்க மாட்டேங்குது. யாராவது வாங்குவான்னு பார்த்தா பெருசா யாரும் வாங்கல. நீங்களாவது வாங்குவீங்கன்னு பார்த்தேன்" என்ற லேசாக கஷ்டத்தோடு வெளிவந்த அந்த வார்த்தைகளை கேட்க இவனுக்கு ஒரு ஆறுதலாக இருந்தது. 

அப்ப நிறைய பேரு வாழ்க்கை வாழ்வதில் சிக்கலோடு தான் இருக்கிறார்கள் என்பது அவனுக்கு மீண்டும் புலப்பட்டது.!

"எவ்வளவு" என்றான். 

"எவ்வளவுக்கு வேணும்" என்றாள்.

"பொதுவா முழம் இவ்வளவு அப்படின்னு சொல்வாங்களே.."

"இப்பல்லாம் யாரு அப்படி கேக்குறா, அம்பது ரூபாய்க்கு குடு நூறு ரூபாய்க்கு குடு அப்படித்தான் போகுது வியாபாரம்"

"மொத்தமா எவ்வளவு இருக்கு"

"ஓ நீங்க யூடியூப்ல ரீல்ஸ் போடுறவங்களா.. எங்ககிட்ட பூவெல்லாம் மொத்தமா வாங்கிட்டு அதுக்கு காசு கொடுப்பீங்க, அப்புறம் திருப்பி பூக்களையும் என்ட்டயே கொடுத்துட்டு போயிடுவீங்க.. அதானே.. கேமரா எங்க இருக்கு..?" 

"நாசமா போச்சு" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

"என்ன பாத்தா ரீல்ஸ் போடற மாதிரியா இருக்கு"

கொஞ்சம் அவனை உத்து பார்த்தவள், "மன்னிக்கணும் உண்மையை சொல்லிடவா" என்றாள் 

"உண்மையா... சரி சொல்லுங்க.. நீங்க ஏதும் ரிலீஸ் போடுறீங்களா என்ன" 

அவள் லேசாக சிரித்தவாறு, கூந்தலை அலசி வந்த காற்றை தட்டுவது போல முகம் முன் விழுந்த கூந்தலை பின்னுக்கு தள்ளியவாறே, 
"உங்கள.. மூஞ்சிய பாத்தா ரீல் அந்து போன மாதிரி இருக்கு அதான்" என்றாள்.

"ம்ம்.. பூ விக்கலன்னாலும் நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை போலிருக்கு"

"உண்மைய தானே சொல்லி இருக்கேன்"

"உண்மைதான்.. ஆனா முன் பின் தெரியாத ஆளுகிட்ட வந்து எப்படி எல்லாம் பேச முடியுது உங்களால" என்றான்.

"ஒரு நாளைக்கு ஆயிரம் பேர், இந்த மணலில் தான் உட்கார்ந்துட்டு  போறாங்க. ஒவ்வொருத்தவங்க மூஞ்சில சந்தோசமா இருக்கும்.சிலர் மூஞ்சில எப்ப கடலுக்குள்ள போகலாம் அப்படிங்கிற நினைப்பு இருக்கும், சிலர் காதலர்கள் இருப்பாங்க, சிலர் வயசு கோளாறுல அத்துமீறி கொண்டு இருப்பார்கள், சிலர் வியாபாரம் நட்டமாகி பிரம்ம புடிச்சது போல உட்கார்ந்திருப்பாங்க.... ஒரு நாளைக்கு இந்த கடலும் நானும் எவ்வளவு மூஞ்சியோ பார்த்திருக்கோம், இந்த அனுபவம் தான்"

அவன் முகத்தை மீண்டும் கடல் பக்கமாக திருப்பிக் கொண்டான்.

அவள் அங்கேயே நின்று கொண்டு தான் இருந்தாள். 

மீண்டும் அவளை ஏறிட்டு நீங்க பூவிக்க போகலையா என்றான்.

"எங்க போறது இங்கதான் சுத்திகிட்டு இருப்பேன். இன்னைக்கு சுத்தி சுத்தி ஓஞ்சிட்டேன்.  கை காலெல்லாம் வலிக்குது. அதான் இங்க நிக்கிறேன். உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே.?" என்றாள் 

"இங்க யாருக்கு தான் பிரச்சனை இல்லை" என்ற முணுமுணுத்தவாறே கடலுக்குள் திரும்பினான். 

சில நிமிட அலைகளின் சத்தத்திற்கு பின்னர்..

"மொத்தமா எவ்வளவு இருக்கு என்று கேட்டீங்களே" என்றவளை மீண்டும் பார்த்தான்.

"ம்ம்"

"வேணுமா?"

"மொத்தமா எவ்வளவு இருக்கு"

"சும்மா கலாட்டா பண்ண கூடாது. மொத்தமா விலை சொன்னால் வாங்கிக்கீரிங்களா" என்றாள் 

அவன் இந்த முறை கடல் பக்கத்தை விட்டு தன் முகத்தை திருப்பவில்லை. 

"300 ரூபாய்க்கு இருக்கு. 250 ரூபாய் கொடுத்தால் போதும்"

அவன் தன் முகத்தை கடல் பக்கத்தில் இருந்து திருப்பாமலேயே 500 ரூபாய் எடுத்து அவளிடம் உயர்த்தினான்.

"பாக்கி கொடுக்க என்கிட்ட அவ்ளோ பணம் இல்லையே"

"கூடையோட வச்சிட்டு போங்க" என்றான்

மீண்டும் ஒரு அலை வந்தது. இந்த முறை அவன் காலை தொட்டுவிட்டது.

"ரொம்ப நொந்து போயிட்டீங்களோ, என்ன பிரச்சனைன்னு கேட்டா சொல்லுவீங்களா" என்றாள் 

அவன் இம்மி அளவு கூட கடல் பக்கத்திலிருந்து தன் முகத்தை திருப்பவில்லை. 

"எனக்கு என்னவோ, கஷ்டத்துல இருக்குற இந்த சூழலில் உங்ககிட்ட இப்பிடி வியாபாரம் பண்ண மனசு கேட்கல"

"பெரும்பாலும் எல்லாரும் உழைப்பதெல்லாம் அவங்கவங்க குடும்ப கஷ்டத்தை போக்கிக்கத்தான். குடும்பம் கஷ்டத்திற்குள் போய்டக்கூடாது என்பதற்குத்தான், வியாபாரம் ஆகலைன்னு சொல்றீங்க. இந்த பணம் உங்க கஷ்டத்தை இன்னைக்கு ஒரு நாள் போக்கட்டும் என்று நினைச்சேன்"

இப்பொழுது அவள் கடலை பார்க்க ஆரம்பித்தாள். 

அலைகளில் மோதல்களால் எங்கோ வெடித்த நீர் துளிகள் நேராக அவள் கண்ணில் வந்து மோதியது.
லேசாக உறுத்தி கண்கள் கசிய, அந்த நேரத்தில் அவளுக்கு அது தேவையாகவும் இருந்தது. 

"மா.. பூ எவ்வளவுமா" என்ற புதிய குரலுக்கு தலை திரும்பாமலேயே "பூவெல்லாம் ஏற்கனவே ஒருத்தர் வாங்கிட்டாரு" என்றாள் மெல்ல.

அவன் முகம் உயர்த்தி அவளை பார்க்கின்ற அதே நேரத்தில் அவள் முகம் தாழ்த்தி அவனை பார்த்தாள். 

இருவரும் கடல் பக்கமாக பார்க்க முகம் திருப்பினார்கள்.

"கூடைய இங்கயோ வச்சுரவா.."

"ம்ம்"

"பணம்"

அவன் 500 ரூபாயை மீண்டும் உயர்த்தினான்.! 
அவள் வாங்கிக்கொண்டாள்.

"மனசு கேட்கல தான். ஆனா இன்னைக்கு...  பிள்ளைக்கு பிறந்தநாள் வேற, ஏதாவது ஸ்வீட் வாங்கிட்டு போலாம்னு இருந்தேன். வியாபாரம் சரியா ஆகல.. கடவுள் வந்து  மொத்தமா  என்கிட்ட வியாபாரம் பண்ணினது போல இருக்கு"

"ஆமா இந்த கூடை எப்படி தூக்கிட்டு போவீங்க"

அவன் இன்னொரு 500 ரூபாய் எடுத்து  உயர்த்தினான்.

"எதுக்கு.."

"உங்க பிள்ளைக்கு பிறந்தநாள்னு சொன்னீங்க..  டிரஸ் வாங்கிட்டு போங்க"

"ஐயோ.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்"

"பரவால்ல.. என் தங்கச்சியோட நிலைமை இப்படி இருந்தா நான் கொடுத்திருக்க மாட்டேனா என்ன"

"இல்ல.. வேண்டாம்..நான் போறேன்" என்றவள் வேகமாக நடந்தாள்.

"ரொம்ப நேரம் இங்கே இருக்காம சீக்கிரம் வீட்டுக்கு போங்க. எல்லாம் நல்லதா தான் நடக்கும்" என்று தூரத்திலிருந்து அவள் குரல் வந்தது.

நீண்ட நேரம்.. அலைகளுக்கும் எண்ணங்களுக்குமான போராட்டம். 
மொத்தமாக நேரத்தை இருள் விழுங்க துவங்கியது.

சிலருக்கு பணம் இருக்கிறது. நிம்மதியை தேடிக் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு நிம்மதி எல்லாம் பெரிதாக இருப்பதில்லை, ஆனாலும் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்பதற்காக பணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பூக்கார பொண்ணு மாதிரி.

நேற்றைய அனுபவங்களால் நாளை என்கிற விசை இன்று அவர்களை உந்தி தள்ளிக் கொண்டே இருக்கிறது.!

மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கையை வாழ்கிறார்களா என்று தெரியவில்லை. சிலர் பிறந்த நாளுக்காக பல ஆயிரங்களை செலவு செய்கிறார்கள். சிலர் மண்டபமே பிடித்து பெரிய விழா எடுக்கிறார்கள் லட்சங்களில் செலவு செய்கிறார்கள்.. 
சிலருக்கு. இதோ.. இந்த பூக்கார பெண்ணுக்கு.... 

சிலருக்கு வாழ்க்கை இடியாப்ப சிக்கலாக போய்விடுகிறது. 
சிலருக்கு போதிய வருமானம் இருந்தும், நல்ல வாழ்க்கை வாழ்வதை விட்டுவிட்டு புதிய பிரச்சனைகளை தாங்களே உருவாக்கி புற்றுபோல வாழ்க்கையை சூறையாடிக் கொள்கிறார்கள். 


எந்த பிரச்சனையையும் பெரிதாக மனைவிக்கு நான் கொடுக்கவில்லை.
பணக்கஷ்டத்தையும் நேரடியாக அவளுக்கு சொல்வதில்லை. 
சிக்கனமாக வாழ்க்கை நடத்துவதை கஞ்சத்தனம் என்று அவள் விரும்புவதில்லை. இந்த பூக்கார பெண் போன்றவர்களின் வாழ்க்கையையும் அவள் உணர்வதில்லை. போராடி வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற உத்வேகமும் இல்லை. 
உன் கூட வாழ்வதற்கு செத்துப் போகலாம் என்று சொல்ல மட்டும் முடிந்து விடுகிறது. 
இருதயத்திற்கு உள்ளே உள்ள எண்ணங்களின் விதைகள் தான் வார்த்தைகளாக வளர்ந்து வெளியே வருகிறது பல நேரங்களில்.

வாழ்க்கை இயல்பாக போய்க் கொண்டிருப்பது பலருக்கு அனுபவிக்க தெரிவதில்லை. ஏதாவது ஒரு கஷ்டம் இருந்து கொண்டே இருந்தால் என்றைக்கு வாழ்க்கை இயல்பாக திரும்பும் என்ற எண்ணம் வரும். 

இயல்பாக வாழ்க்கை போகும்போது சின்ன சின்ன குறைகள் கூட பெரும் பிரச்சனைகள் போல கண்களை கவ்வும்.
நமக்கும் அதான் கவ்விடுச்சு போலிருக்கு. ஒரே அடியாக கழுத்தறுபட்டு சாகலாம், தினமும் முள் வைத்து குத்தப்படும் வலியை விட அது பரவாயில்லை என்று மனம் சொல்லியது.

"என்ன.. வந்துடவா.."  மெல்ல முணுமுணுத்தவாறு இரண்டு பூக்களைப் பிய்த்து கடல் பக்கம் வீசினான்.
அலைகள் ஜம்மென்று  உள்ள இழுத்துக் கொண்டது அவனுக்கு "தாராளமாக" என்ற சம்மதம் தெரிவிப்பது போல இருந்தது. 

அவன் ஊன்றி இருந்த ஒரு பக்கம் கையை எடுத்து ஒட்டியிருந்த மணலை தட்டி மீண்டும் கையை ஊன்றி எழ எத்தனிக்கும் போது...

"மாமா" சின்ன செல்லக்குரல்.

திரும்பியவனுக்கு... மஞ்சள் நிற கவுனில், கையில் சாக்லேட் பாக்கெட்டுடன் சிரித்த முகத்தோடு வந்த சிறுமியை பார்க்கயில் அவனுக்கு விளங்கிவிட்டது. 

"இந்தாங்க சாக்லேட் எடுத்துக்குங்க." இப்பொழுது சரியாக கலங்கரைவிலக்கம் சிறுமிக்கு ஒளி பாய்ச்சியது. 

"உன் பேர் என்ன" என்றான். 

"செவ்வந்தி" என்றாள்.

சரியா போச்சு... பூக்கார பொண்ணு சரியா தான் பேரு வெச்சி இருக்கு என்று நினைத்துக் கொண்டான்.

"எதுக்குமா இந்த சின்ன புள்ளைய கூட்டிகிட்டு இருட்டுல இப்படி வந்து இருக்க"

பூக்கார பொண்ணு ஒன்னும் சொல்லவில்லை. 

"அம்மாதான்.. அவங்க சின்ன வயசுலயே செத்துப்போன அவங்க அண்ணன் கடற்கரையில் வந்து உட்கார்ந்து இருக்காருன்னு சொல்லி, மாமாவை பாக்க வாரியாமானு கூட்டிட்டு வந்துச்சு" 

இப்பொழுது அவனுக்கு அலை ஒரு நீர்த்துளி கீற்றை அடித்தது. லேசாக கண்கள் கலங்கியது. நெற்றியை சுருக்கி கண்களை மூடிக்கொண்டான்.

நன்றி நிறைந்த உள்ளங்கள் இந்த உலகத்தில் எவ்வளவு இருக்கின்றன என்று நினைத்துக் கொண்டான்.!

"இந்த இருட்டுல இந்த சாக்லேட்டை கொண்டுக்கிட்டு  இவ்வளவு தூரம் வரணுமா" என்றான்.

"அம்மா இது நம்ம கூடை தானே"

சிறுமியை தன் பக்கம் சேலையோடு இழுத்துக் கொண்டாள்.

"இந்த பூக்கூடையை நீங்க எடுத்துட்டு போறீங்களா" என்றான்.

அவள் ஒண்ணுமே சொல்லாமல் பூக்கூடையை எடுத்தாள். 
அவள் கூடையை தூக்கும் பொழுது ஒரு சில பூக்கள் கீழே விழுந்தது. 

"நாங்க போயிட்டு வர்றோம் மாமா"

"இப்படி எல்லாம் சின்ன பிள்ளைய இருட்டுல கூட்டிட்டு வராதம்மா, பிறந்தநாள் அதுவுமா"

"சாக்லேட் கொடுத்துட்டு போக மட்டும் நான் வரல. மனசு கேக்கல.. ஒன்னு  சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்"

அவன் கீழே சிதறிய பூக்களை கையில் எடுத்துக் கொண்டவாரே என்ன என்பது போல நிமிர்ந்து பார்த்தான்.

"ஏற்கனவே என்னோட ஒரு நல்ல அண்ணன் செத்துப் போச்சு...." அதற்கு மேல் அவள் பேச முடியாமல், புடவையில் ஒரு தலைப்பை எடுத்து கண்ணை துடைத்துக் கொண்டாள்..
"வீட்டுக்கு போயிடுங்க" என்ற வார்த்தைகளை அவள் சொல்லும் போதே அவனுக்கு தெரிந்து விட்டது எவ்வளவு துக்கமான நிலையில் அவளது சொல்கிறாள் என்று.

சிறுமியும் பூக்கார பெண்ணும் திரும்பிப் போய்க் கொண்டே இருந்தார்கள்.!

அவனும் அந்த சில பூக்களும் அங்கு நீண்ட நேரம் தனியாக இருந்தார்கள். 

அவன் தனது உள்ளங்கை விரித்து பார்த்தான்.  சில பூக்கள் இருந்தன. கடலுக்குள் வீசினான். அடுத்த அலையே அவன் காலடியில் அதை தள்ளிவிட்டு சென்றது. 

இப்பொழுது கடல் அவனுக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. நாற்றம் ஏதும் அவன் உணரவில்லை.

இப்பொழுது கடல் முழுவதும் அவனுக்கு மலர்களின் மணம் வீசியது.!


_
எழுத்து : 
பூங்குன்றன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...