முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலைப்பு எதுக்கு இதுக்கு?



மீண்டும் ரெட் சிக்னல்..

தனது காலில் உள்ள அழுக்கடைந்த கட்டு போட்ட பான்டேஜுடன் வயதான பெண்மணி நின்றுகொண்டுள்ள வாகனத்தின் இடையே புகுந்து கையேந்திக்கொண்டு தன் காலை இழுத்து இழுத்து நடந்தாள்.

பெரும்பாலான சிலர் அந்த முதியவள் தங்களை வண்டிகளை நெருங்கியதும் அவளை தவிக்க வண்டியை முன்னே நகர்த்திக்கொண்டு இருந்தார்கள்..

அரிதாய் சிலர் சில்லறை கொடுத்தார்கள், அந்த முதியவள் சலாம் வைத்துவிட்டு அடுத்த வண்டிகளை நோக்கி நடக்கையில் சிக்னல் மாறியது..

ஹாரன் சப்தங்கள் காதை கிழிக்க வண்டிகள் பாய்ந்து சென்றன..

அவள் வெயில் அதிகம் ஆகியதால் வழமையாக அமரும் அந்த ஒற்றை மரத்துக்கு அடியே தஞ்சம் புகுந்தாள்.
தனது தோள் பையில் இருந்து ஒரு பழைய வாட்டர் பாட்டிலை எடுத்தது தண்ணீர் குடித்தாள், 
அன்றும் அந்த நாய் அதை கவனித்துக்கொண்டே இருந்ததால், அவள் அருகே வந்தது.. 
அவள் அளவோடு கொஞ்சமாய் தண்ணீரை அந்த நாய் குடிக்க அவள் அதுக்காகவே வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் குவளையில் ஊற்றினாள்.

வறண்ட நாவில் நீர் பட்ட நேரத்தில் நாயின் உயிர் மீண்டு நின்றது.  அந்த குவளையில் உள்ளே உள்ள ஈரப்பதத்தை தன் நாக்கினால் நக்கியது,

அதை கவனித்த அந்த முதியவள் நாயின் தாகத்தின் உச்சத்தை அறிந்து வேதனைப்பட்டாள், 

அதே மரத்துக்கு அந்தப்பக்கம் போலீசார் நிழற்குடை இருந்தது.  அதில் அமர்ந்து தான் சாலையை கண்காணிப்பது அவர்கள் பணி.

தண்ணீர் சுத்தமாக தீர்த்தத்ததால் முதியவள் மெல்ல நகர்ந்து நடந்து அன்று அங்கிருந்த பெண் காவலரை நோக்கி சென்று தனது தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.

இருக்கும் வெயிலின் கொடுமையால் தூசியும் கருமையும் முகத்தில் அப்பிப்போயிருந்த பெண் காவலர் தன் தண்ணீர் பாட்டிலை திறந்து அரை பாட்டில் தண்ணீரை முதியவளுக்கு ஊற்றினாள்.

மீண்டும் முதியவள் மரத்தடி மறுபக்கத்துக்கு வந்து சற்று சரிந்தவாறு அமர்ந்தாள்.

நாய் அவளை நோக்கியே பார்த்துக்கொண்டு இருந்தது அவளுக்கு அதன் கொடும் தாகம் இன்னும் தீரவில்லை என்று தெரிந்தது. 
பைக்குள் பார்த்தாள், முப்பது ரூபாய் தேறும் அளவுக்கு சில்லறை கிடந்தது. 
இப்போதைக்கு மத்திய உணவுக்கு அது போதுமானது, அதில் கொஞ்சமா இரவுக்கும் வைத்துக்கொள்ளலாம், ஆனாலும்.. இந்த நாயை என்ன செய்ய..

வீடுகள் பெரிதும் இல்லா இண்டஸ்ட்ரியல் பகுதி, சில இடங்களில் இருக்கும் தள்ளுவண்டி கடைகளின் மிச்சம் மீதி தான் நாயின் உணவு, மீந்த உணவுகள் கொஞ்சமேனும் கிடைக்குது.. ஆனால் தண்ணீர்.. அதுதான் பிரச்சினையாக இருந்தது..

தள்ளுவண்டி கடையில் வாங்கிய பிரிஞ்சி சாதம். பிரிஞ்சி அவளுக்கு பிடிக்காத உணவு .ஆனால் வயிறு நிரப்ப அதுதான். கொஞ்சம் கூடுதலாகவே பசி தாங்கும் உணவு அது. 

நாய்க்கு பிரிஞ்சி சாதம் கொஞ்சம் வைத்தாள், நாயின் தேவையோ உணவை விட தண்ணீர் தான் என்று இருந்தது. 

ஓரிரு நாளில் கிழவி வெயிலின் தாக்கத்தால் சாலையில் கையேந்த இயலவில்லை. எப்போதும் இல்லாத அளவுக்கு உடலில் சக்தி மொத்தமாய் இழந்திருப்பதை அவள் உணர்ந்தாள். 

மரத்தடி வந்து படுத்து சாய்ந்தாள். 

தண்ணீர் சுத்தமாய் இல்லை . மீண்டும் காவலர் பக்கம் போனதும் அங்கு யாருமில்லை .
நாயும் பின்னாடியே வந்து நின்றது. 
வேறு வழியில்லை.. சிக்னலில் நின்ற வாகங்களுக்கு இடையே மிச்சம் மீதி இருந்த சக்தியுடன் ஒரு பிளாஸ்டிக் பைப்பை முட்டுக்கு வைத்துக்கொண்டு கையேந்த அன்று இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளும் கொஞ்சம் சில்லரையும் கிடைத்தது.

முதியவள் திரும்பி நாயை பார்த்தாள், அது நடக்க இயலாது அவள் கையேந்தி நிற்பதையும் சிலர் காசு கொடுத்ததையும் பார்த்துக்கொண்டு தன் தலையை சரித்துக் கிடந்தது. 

முதியவள் திரும்பி போலீசார் நிழற்குடை பக்கம் பார்வை வீசினாள், யாருமில்லை. 

அவள் தன் காலை இழுத்துக்கொண்டே சாலையின் மறுபக்க முக்கில் உள்ள ஒரு பெட்டி கடையில் இருபது ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கினாள்,
அதை கண்ட நாய் எழுந்து உக்கார்ந்து வாலை சற்று ரெண்டு மூன்று முறை ஆட்டியது.  அதற்கு மேல அதுக்கு தெம்பில்லை போலும். 

முதியவள் சாலையை கடக்க திணறி நின்றாள். காவலர் இல்லை, சிக்கனல் போட்டும் பலர் நிற்காது போனதால், அதுக்கு மேல நிக்கவும் இயலாத பெரிய வேதனையை அவளுக்கு தந்தது. ஒரு கனத்தில் சாலையின் மறு பக்க வேலி ஓரமாய் சரிந்தே விழுந்தாள்.

நாய் அதை கண்டதும் சட்டென எழுந்து ஓடியது, அங்குமிங்கும் ஓடி ஒரு வழியாய் சாலையை கடந்து அவளை நெருங்கியது. 
அவள் படுத்த நிலையிலேயே நாயை பார்த்ததும் தண்ணீர் பாட்டிலை திறந்து நாயின் வாயில் ஊற்றினாள்,

நாய் பாதி குடித்து தீர்க்கும் முன்னரே முதியவள் உயிர் ஓட்டம் தீர்ந்து போனதால் பாட்டிலை கீழே கைவிட்டாள், மீதம் இருந்த நீர் தரையில் பட்ட அடுத்த நொடியே தரை அதை இழுத்துக்கொண்டது. நாய் விழுந்த நீரை நக்கிப்பருகும் முன்னரே உலர்ந்ததை பாரத்தால் நாயை விட தரைக்கு தாகம் அதிகமாய் இருந்தது போலிருக்கு.

அதை மோப்பம் பிடித்த நாய் அதிர்ந்து அவளை தன் முகத்தால் இடிப்பதும், சற்று முனகுவதுமாய் அவளை சுற்றி சுற்றி வந்தது, முதியவள் எழவில்லை .

அன்று மாலை நாய் கண் முன்னே காவலர் ஒருவர் மற்றும் சிலரால்  முதியவள் ஒரு வண்டியில் கொண்டு போகப்பட்டாள், அவளுக்கான  முதல் வண்டி சவாரி அதுதான். கடைசியும் அதுதான் என நினைத்து பார்க்க கூட ஆளில்லை.

நாய்...
அன்றிரவு அது அவள் விரித்து படுத்திருந்த அட்டை விரிப்பை சுற்றி வந்து அதிலேயே படுத்துக்கொண்டது. அட்டையின் கதகதப்பு அதிகமோ என்னவோ நாய் மெல்ல எழுந்து பக்கத்தில் மண்ணில் மெல்ல தோண்டி அதிலும் ஈரம் இல்லாததால் வேறு வழியின்றி அதிலேயே படுத்து உறங்கியது..

மறுநாளுக்கான தண்ணீர் பிரச்சினை ஆரம்பமானது. நாய் அங்குமிங்கும் அலைந்தும் தண்ணீர் இல்லை. ஒரு கார் ஷோரூம் ஏசி பைப்பில் இருந்து சொட்டும் நீரும் போதுமானதாக இல்லை. அடைக்கப்பட்ட கால்வாய் வழி எல்லா நீரும் எங்கோ போவதால் குடிக்க வழியில்லை. 

வேறு இடம் பெயர நாய்க்கு தெம்பில்லை. 
முதியவள் இருந்திருந்தால் எப்படியும் தண்ணீர் கிடைத்திருக்குமே என நாயின் யோசனை இருந்திருக்கலாம்.

வறண்ட நாவுடன் நாய் திரும்பி பெட்டிக்கடை பக்கம் பார்க்க, அங்கு தண்ணீர் பாட்டில்கள் அடுக்கி இருந்தது. 

சட்டென என்ன நினைத்தது என்று தெரியவில்லை, சிக்னல் அருகே வந்த நாய் தன் இரு பின்னங்கால்களை ஊன்றி முன் கால்களை நீட்டி அங்கு சிக்னலில் நிற்கும் வண்டி ஓட்டிகளிடம் முனகியவாறே கால் ஏந்த ஆரம்பித்தது.!

-------------------------------

அறந்தாங்கி பூங்குன்றன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...